Paristamil Navigation Paristamil advert login

பாரத் டாக்சி சேவையை முடக்க நியாயமற்ற போட்டி நடக்கிறது; அமித்ஷா

பாரத் டாக்சி சேவையை முடக்க நியாயமற்ற போட்டி நடக்கிறது; அமித்ஷா

28 ஆனி 2026 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 236


கூட்டுறவு முறையில் செயல்படும், 'பாரத் டாக்சி' சேவையை சந்தையில் நிலைநிறுத்த விடாமல் தடுக்க, சில தனியார் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்து நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதாக மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஊபர், ஓலா, ரேபிடோ' போன்ற தனியார் டாக்சி செயலிகளுக்கு மாற்றாக, 'பாரத் டாக்சி' செயலி மத்திய அரசின் ஆதரவுடன் சில மாதங்களுக்கு முன் டில்லியில் அறிமுகமானது. இந்த செயலி கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.

ஓட்டுனர்களே இந்த செயலியின் பங்குதாரர்கள். எந்த ஒரு சவாரிக்கும் கமிஷன் செலுத்த வேண்டியதில்லை. பயணி செலுத்தும் கட்டணம் முழுமையாக ஓட்டுனருக்கே கிடைக்கும்.இந்நிலையில், 14வது நகரமாக குஜராத்தின் காந்திநகரில், 'பாரத் டாக்சி' சேவையை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இவர் உள்துறையுடன் சேர்த்து கூட்டுறவு துறையையும் கவனித்து வருகிறார்.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

இன்று சிலர், 'பாரத் டாக்சி'யின் கட்டணம் அதிகம் என கூறுகின்றனர். அதற்கு காரணம், 'பாரத் டாக்சி' நுழையும் இடங்களில் போட்டி நிறுவனங்கள் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் கட்டணங்களை குறைத்து வருகின்றன.

'பாரத் டாக்சி'யை சந்தையில் நிலைநிறுத்த விடாமல் தடுக்கவே இதை செய்கின்றனர். பின் மீண்டும் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்பதே அவர்களின் நோக்கம். ஆனால், இந்த தந்திரம் நம் நாட்டில் வெற்றி பெறாது.

ஓட்டுனர்களின் வருமானத்தில் இருந்து கமிஷன் பிடித்தம் செய்யப்பட்டது. அவர்களுக்கு உரிய கட்டணம் பல நாட்கள் தாமதமாக வழங்கப்பட்டது. பயணியர் புகார் அளித்தால், ஓட்டுனரின் தரப்பை கேட்காமலேயே அவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்த சுரண்டலை முடிவுக்கு கொண்டு வரவே, 'பாரத் டாக்சி' கூட்டுறவு முறை உருவாக்கப்பட்டது. இதில் ஓட்டுனர்களோ, பயணிகளோ யாரும் சுரண்டப்படக் கூடாது என்பதே முக்கிய நோக்கம். இரண்டு ஆண்டுகளில் 500 நகரங்களுக்கு, 'பாரத் டாக்சி'யை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.