தேர்தல்களில் போட்டியிட திமுக.,வில் இனி கூட்டணி கிடையாது?
27 ஆனி 2026 சனி 13:14 | பார்வைகள் : 197
இனி வரும் தேர்தல்களில் கூட்டணி அமைக்காமல், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என்ற குரல், அக்கட்சியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கட்சியினரின் இந்த கருத்தை பரிசீலிக்கப் போவதாக, திருவாரூரில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள், த.வெ.க., பக்கம் போய் விட்டன; அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உள்ளன.
இவற்றில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகள், தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன; விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் அறிவிக்க உள்ளன.
இதற்கிடையில், கூட்டணியில் நீடிக்கும் ம.தி.மு.க.,வும் தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. அக்கட்சியும் அனேகமாக த.வெ.க., பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. அப்படியொரு முடிவு எடுத்தால், தி.மு.க., சின்னத்தில் வெற்றி பெற்ற அக்கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
இச்சூழலில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மதிவாணன் மகன் கதிரவன் - மவுனிகா திரு மணம், திருவாரூரில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற தி.மு.க., துணை பொதுச்செயலரும், எம்.பி.,யுமான ஆ.ராஜா பேசியதாவது:
அண்ணாதுரையும், ராஜாஜியும் இருந்த சட்ட சபையில், இன்று யார் யாரோ உள்ளனர். இந்த தலைவனை, ஒரு தேர்தலை வைத்து எடை போட முடியுமா? மேடையில் உள்ள முத்தரசன் மன்னிக்க வேண்டும். இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கூறுகிறார்; தி.மு.க., கூட்டணியே இல்லை என்கிறார்.
அதை சொல்ல நீங்கள் யார்; உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? எங்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். இவ்வாறு சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். எங்கள் கூட்டணியில், 60 இயக்கங்கள் உள்ளன.
இன்னொருவர், 'பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கிறோம்' என்கிறார். அவரது மொத்த கட்சியையும், கலைஞர் அரங்கத்துக்குள்ளேயே கூட்டி விடலாம்; அவரெல்லாம் பேசுகிறார். இனி கூட்டணியே இல்லை என ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், வேறு வழியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின், திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது:
சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரையின் போது, 'எங்கே உங்க அப்பாவை காணோம்' என விமர்சித்திருக்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்; அது போதும்.
நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். நான் சட்டசபையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன். கடந்த 60 ஆண்டுகளாக, மக்களோடு மக்களாகத் தான் இருந்து கொண்டிருக்கிறேன்.
நான் முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளில், நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களை போல எந்த முதல்வரும் நடத்தியிருக்க மாட்டார். நான் பயணம் செய்தது போல எந்த முதல்வரும் பயணம் செய்திருக்க மாட்டார்.
நான் கோட்டைக்கு சென்றது தான் அதிகமாக இருந்திருக்கும். கோட்டையில் தான் மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம் என, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகள் எல்லாம் இருக்கின்றன. அந்தக் கோப்புகளை எல்லாம் எடுத்து பாருங்கள். அவற்றில், மு.க.ஸ்டாலின் என கையெழுத்து போட்டிருப்பேன். எனவே, நான் எங்கே இருக்கிறேன் என, நீங்கள் தேடிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
அண்ணாதுரை ஒரு முறை சொன்னார். 'தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயரை சூட்டி இருக்கிறேன்; எனக்கு வாழ்க்கையில் இது போதும். நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்ற பெயர் சொல்லும் வரை என் பெயர் இருக்கும்' என சொல்லி இருக்கிறார்.
அதுபோன்று, மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருக்கும் வரைக்கும், இந்த ஸ்டாலின் தான் முதல்வர்.
துணை பொதுச்செயலர் ஆ.ராஜா பேசும்போது, கூட்டணி பற்றி எடுத்து சொன்னார். கருணாநிதி கூட்டணி அமைத்தால், அக்கூட்டணியை பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத் தான் செல்வரே தவிர, கருணாநிதி இதுவரை யாரையும் விட்டது கிடையாது.
அதேபோல நானும் கருணாநிதி வழி நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். அவர்களாக சென்றால், நான் ஒன்றும் சொல்ல முடியாது. அது தான் என் கடமை. இன்றைக்கு கூட்டணியே தேவையில்லை என சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
யாரும் யாரையும் காணாமல் அடித்துவிட முடியாது, என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் முத்தரசன் காட்டமாக பேசினார்.
திருமண விழாவில் அவர் பேசியதாவது:
ஆற்றுப் படுகையில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது, இந்த பக்கத்தில் இருந்து, அந்த பக்கத்தை பார்க்கும்போது பச்சையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என சொல்வர்; முதலில் ஒரு ஆடு செல்லும்; அதை தொடர்ந்து ஒரு மாடு செல்லும். பின், ஒரு மந்தையே காலியாகி, அந்த பக்கம் சென்று விடும். அங்கு போனால், நிலைமை இதை விட மோசமாக இருக்கும்.
எங்கேயாவது கொஞ்சம் பச்சை தெரியும்; அங்கு ஒன்றுமே இருக்காது; காய்ந்து கிடக்கும். வந்து விட்டோம் என திரும்பி விட்டால், அந்த பகுதி நம்மை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொள்ளாதா என தெரியாது.
இரண்டு நாள் இருந்து விட்டாவது சென்று விடுவோம் என்ற சூழல் உள்ளது. இதை யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை; பொதுவாக சொல்கிறேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, திருவாரூர் இல்லத்தில் சந்தித்து விட்டு வந்தபோது, நாகை மாவட்ட தி.மு.க., செயலர் கவுதமன், என்னை வழக்கமாக 'அப்பா' என கூப்பிடுவதை தவிர்த்து விட்டு, 'அண்ணன்' என அழைத்தார்.
ஏன் மாற்றி கூப்பிடுகிறீர்கள் என கேட்டபோது, 'நீங்கள் தான் மாறி விட்டீர்களே' என்றார். கூட்டணி மாறியதை பற்றி தெரிவித்தார். யாரும், யாரையும் காணாமல் அடித்துவிட முடியாது. அப்படி சொல்வது பைத்தியக்காரத்தனம். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan