Paristamil Navigation Paristamil advert login

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

கொய்யாப்பழம் சாப்பிடுவதால்  கிடைக்கும்  நன்மைகள்  பற்றி  தெரியுமா?

26 ஆனி 2026 வெள்ளி 14:24 | பார்வைகள் : 126


கொய்யாப்பழம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட ஒரு பழமாகும். கொய்யாப்பழம் மட்டுமல்லாமல், அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் A, பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவுகின்றன. கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகளை உட்கொள்வதால் கிடைக்கும் 7 நன்மைகள் இங்கே...

எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது: கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து அவ்வப்போது ஏற்படும் பசியைக் குறைக்கிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் தங்கள் உணவில் கொய்யாப்பழத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கொய்யாப்பழம் வைட்டமின் 'சி' சத்தின் ஒரு களஞ்சியமாகவும் திகழ்கிறது. இதில் உள்ள தாதுக்கள் உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உடலில் உள்ள கெட்ட (LDL) கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.

மாதவிடாய் வலியைக் குறைக்கிறது: பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு கொய்யா இலைச் சாறு ஒரு சிறந்த மருந்தாகும். தினமும் கொய்யா இலைச் சாற்றைக் குடிப்பது மாதவிடாய் கால வலியைத் தணிக்க உதவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது: கொய்யாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொய்யா இலையைக் காய்ச்சிக் கொதிக்க வைத்த நீரை உணவுக்குப் பிறகு குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

செரிமானத்திற்கு உதவுகிறது: கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் கொய்யா இலைச் சாற்றிற்கு உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தோலின் அழகைப் பராமரிக்கிறது: கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் அழகைப் பராமரிக்க உதவுகின்றன. முகத்தில் உள்ள கறைகள் மற்றும் பிற குறைபாடுகளை நீக்க கொய்யா இலைச் சாறு உதவும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.