Paristamil Navigation Paristamil advert login

ஆர்யா கம்பேக் கொடுத்தாரா ?

ஆர்யா கம்பேக் கொடுத்தாரா ?

26 ஆனி 2026 வெள்ளி 13:21 | பார்வைகள் : 176


ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் 'அனந்தன் காடு'. முரளி கோபி கதை எழுத, ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதுவே இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கதை நடந்தாலும், அதற்கு ஒரு தமிழ் பின்னணியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் திருவனந்தபுரம் ஒரு பெரிய காடாக இருந்ததாம். மான், புலி, விஷப் பாம்பு, கீரி, வேட்டைக்காரன் என அனைவரும் வாழ்ந்த காடு. காலம் உருண்டோடி, காடு நாடாக மாறினாலும், அந்த காட்டுத்தனம் இன்னும் பல வடிவங்களில் அங்கே மிச்சமிருக்கிறது.

80-களின் இறுதியிலும் 90-களின் தொடக்கத்திலும் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திரன்ஸ், முரளி கோபி, அப்பானி சரத், தேவ் மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு குழு, ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக கூலிக்கு அடிதடி, கொலை என செய்து கொண்டிருந்தவர்கள். இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு கானமேளா குழுவை ஆரம்பித்து அமைதியாக வாழ்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்காக இவ்வளவு செய்தும், கடைசியில் மிஞ்சியது வறுமை மட்டுமே. இந்தச் சூழலில், ஆர்யா நடிக்கும் தமிழ் கதாபாத்திரமான 'மணி'க்கு இந்தக் குழு அடைக்கலம் கொடுக்கிறது. மணியின் வருகைக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் முக்கிய கதைக்களம்.

அதிகார வர்க்கங்கள் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் இருப்பு, மற்றும் வாழ்க்கைக்கான போராட்டம்... இவை அனைத்தையும் தனக்கு உரமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகார வர்க்கம் என்ற காடு! இந்த வலுவான கதைக்களத்தோடு, நடிகர்களின் நடிப்பையும் குறிப்பாக சொல்ல வேண்டும். ஆர்யாவுக்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்றாலும், இந்திரன்ஸ் மற்றும் முரளி கோபியின் குழுவுக்குத்தான் அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ். வில்லனாக வரும் விஜயராகவனின் கதாபாத்திரம், சாந்தி பாலச்சந்திரன், சுனில், நிகிலா விமல், அச்யுத் குமார், ஸ்ரீலதா நம்பூதிரி போன்றோரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அஜனீஷ் லோக்நாத்தின் இசை மற்றும் ஆர். சக்தி சரவணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளன.

எந்த நாட்டிலும் வேட்டைக்காரனுக்கும் வேட்டையாடப்படுபவனுக்கும் ஒரே முகம்தான் என்பதைப் போல, வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ள கதாபாத்திரங்களை 'அனந்தன் காடு' காட்டுகிறது. அதிகாரத்தின் பக்கம் நிற்கும் காவல்துறையின் கொடூரத்தை படத்தில் இரண்டு இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தக் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் செட்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முரளி கோபியின் முந்தைய திரைக்கதைகளைப் போலவே, இந்தப் படத்திற்கும் சில உண்மைச் சம்பவங்கள் உத்வேகம் அளித்திருக்கின்றன.

சிஸ்டத்தின் உத்தரவுப்படி சாதாரண மக்கள் மீது காவல்துறை நடத்தும் வன்முறையை இயக்குநரும் எழுத்தாளரும் இங்கே விமர்சிக்கிறார்கள். திருவனந்தபுரம் பின்னணியில் குண்டர்கள் கும்பல்களின் கதையை மலையாள சினிமா இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறது. ஆனால், 'அனந்தன் காடு' அரசாங்கங்களால் கருவியாக்கப்படும் மனிதர்களின் கதையாக தனித்து நிற்கிறது. கதை நேர்கோட்டில் பயணிக்கிறது. ஒரு பெரிய கேன்வாஸில் ஆக்‌ஷன், மாஸ், எமோஷன் கலந்து ஒரு நல்ல திரையனுபவத்தைக் காண 'அனந்தன் காடு' படத்திற்கு தாராளமாக டிக்கெட் எடுக்கலாம். படம் முடிந்து வெளியே வரும்போது, கதையும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களுடன் பயணிக்கும் என்பது உறுதி.