Paristamil Navigation Paristamil advert login

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி? நேரு சூசகம்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?  நேரு சூசகம்

26 ஆனி 2026 வெள்ளி 09:16 | பார்வைகள் : 192


திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் நேரு சூசகமாக தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியடைந்தார். அந்த தோல்வி, ஸ்டாலினுக்கும், கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரண்டு இடங்களிலுமே வெற்றி பெற்றார். இவற்றில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இது தவிர, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர் ராஜினாமா செய்ததால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இந்த இடைத்தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மகேஷ் தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் சட்டசபையில் நடந்த கவர்னர் உரை மீதான விவாதத்தின் மீது பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், 'முடித்து விட்டோம்' என்ற பொருளில் சைகை காட்டினார். இது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ''சட்டசபையில் முதல்வர் விஜய், 'அப்பாவை காணோம்' என கேட்கிறார்; வருவார், எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டசபைக்கு வந்து பொறுப்பேற்பார்; இது உறுதி,'' என்றார். இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி என்பதையே, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., தீர்மானமும், நேரு பேச்சும் வெளிப்படுத்துவதாக தெரிகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.