டிஜிட்டல் கைது மோசடி விவகாரம்; 16 மாநிலங்களில் 80 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
26 ஆனி 2026 வெள்ளி 06:05 | பார்வைகள் : 172
உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதள முகவரியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரை, 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி வழக்கில், 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது பெயரில் நடக்கும் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போலீஸ், சி.பி.ஐ., அல்லது அமலாக்கத் துறை அதிகாரிகள் போல் நடித்து, 'வாட்ஸாப், ஸ்கைப்' போன்ற செயலிகள் வாயிலாக வீடியோ அழைப்பு செய்து மக்களை மிரட்டி பணம் பறிப்பதே இந்த டிஜிட்டல் கைது நடவடிக்கையின் நோக்கம்.
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தை போலியாக உருவாக்கி, அதை பயன்படுத்தியும் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற இணையதளத்தை போலவே அமைக்கப்பட்ட அந்த முகவரியில், அதிகாரப்பூர்வ நீதிமன்ற உத்தரவுகள், 'பிடிவாரன்ட்'கள் மற்றும் அறிவிப்புகள் போல் தோற்றமளிக்கும் போலி ஆவணங்களை உருவாக்கி, பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளனர்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற பதிவாளர் சி.பி.ஐ.,யில் புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவைச் சேர்ந்த சஞ்ஜிப் சாஹா, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த நரேஷ் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்தது.
தங்கள் மோசடி நடவடிக்கைகளுக்கு நம்பகத்தன்மை அளிப்பதற்காக, நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறு சட்ட அமலாக்க முகமைகளால் வெளியிடப்படுவது போன்ற போலி உத்தரவுகள், புனையப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தில் பதிவற்றியதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக, 'ஆப்பரேஷன் சக்ரா சிக்ஸ்' பெயரில் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.தமிழகம், பஞ்சாப், குஜராத், டில்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா, மணிப்பூர் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில், 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், பல முக்கிய ஆவணங்கள், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் பறி முதல் செய்யப்பட்டன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan