மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்? ஜனாதிபதியுடன் அமித் ஷா திடீர் சந்திப்பு!
26 ஆனி 2026 வெள்ளி 05:02 | பார்வைகள் : 191
மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக பேசப்படும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவரான ஜார்ஜ் குரியன், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் கடந்த 21ம் தேதியுடன் முடிந்தது.
மேலும், மீண்டும் ராஜ்ய சபா எம்.பி., பதவிக்கு, அவரை பா.ஜ., முன்னிறுத்தவில்லை. இதனால், மத்திய இணை அமைச்சர் பதவியை ஜார்ஜ் குரியன் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.அதே போல், மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்துறை இணை அமைச்சரான ரவ்நீத் சிங்கின் ராஜ்ய சபா எம்.பி., பதவி கடந்த 21ம் தேதியுடன் முடிந்தது. இவரையும் மீண்டும் ராஜ்ய சபா எம்.பி., பதவிக்கு பா.ஜ., முன்னிறுத்தவில்லை.
கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரிய அளவில் சோபிக்கவில்லை. கட்சியின் மோசமான செயல்பாடுகளே ஜார்ஜ் குரியன் மீண்டும் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படாததற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம், கேரளாவில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஏனெனில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ராவும் அந்த பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் டில்லி மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இறுதியில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேச மாநில பா.ஜ., தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இப்படி அடுத்தடுத்து, சொந்த மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்புகளுக்காக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டனர். இதனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என பேசப்பட்டது. அதற்கேற்றபடி கடந்த 23 அன்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளார்.
இதனால், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகள் உறுதியாகி உள்ளன. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அம்மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan