ராமதாஸ் - அன்புமணி கட்டியணைப்பு: கண்கள் பனித்தன; இதயங்கள் சேர்ந்தன
25 ஆனி 2026 வியாழன் 14:40 | பார்வைகள் : 175
நீண்ட இடைவெளிக்கு பின், நேற்று தன்னை சந்தித்த பா.ம.க., தலைவர் அன்புமணியை, அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் கட்டியணைத்து, ஆனந்த கண்ணீர் வடித்தார். பெற்றோரின் 61வது திருமண நாளில் நெகிழ வைத்த தந்தை - மகன் சந்திப்பால், பிரிந்து கிடந்த குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2024 டிசம்பர் 28ல் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வெடித்தது. அதன் பின், இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில் எதிரெதிராக போட்டியிட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி தலைமையிலான பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, கட்சி முழுமையாக அன்புமணி கட்டுப்பாட்டுக்குள் வந்ததுடன், எந்த நேரத்திலும் அப்பாவும், மகனும் இணைவர் என்ற பேச்சும் வலுவானது.
இந்நிலையில், ராமதாசின் 61வது திருமண நாளை முன்னிட்டு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் அன்புமணி சென்றார்.
அவர்களை உறவினர்களும், வீட்டு பணியாளர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், தந்தை ராமதாஸ், தாய் சரஸ்வதி ஆகியோரை சந்தித்து, அவர்களின் காலில் விழுந்து, அன்புமணி, அவரது மனைவி சவுமியா உள்ளிட்டோர் ஆசி பெற்றனர். மேலும், தன் பேரக் குழந்தையை ராமதாசிடம் காட்டி, அன்புமணி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
அப்போது, ராமதாசின் இளைய மகள் கவிதாவும், அவரது குடும்பத்தினரும் உடனிருந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், தன் மகன் அன்புமணியை நேரில் பார்த்ததும், அவரை கட்டிப் பிடித்து ராமதாஸ் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தைலாபுரம் தோட்ட இல்லத்துக்கு அன்புமணி, அவரது இளைய சகோதரி கவிதா குடும்பத்தினர் வந்த நிலையில், மூத்த சகோதரி ஸ்ரீகாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லை.
ராமதாசை சந்தித்த பின் பேட்டியளித்த அன்பு மணி, ''அப்பா - அம்மாவின் திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்துடன் சென்று, அவர்களின் வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டோம். இனி நல்லதே நடக்கும்,'' என்றார்.
தந்தையை சந்தித்து அன்புமணி சமாதானமாகி இருப்பதால், ஒன்றரை ஆண்டுகளாக பா.ம.க.,வில் நடந்து வந்த குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:
மகன் அன்புமணியை கண்டதும் ராமதாஸ் கட்டியணைத்துக் கொண்டார். இரண்டரை மணி நேரம் குடும்பத்தினருடன் இருவரும் பேசினர். அப்போது, சமூக நீதி கணக்கெடுப்புக்காக, அனைத்து கட்சி கூட்டத்தை அன்புமணி நடத்தியதையும், அதை கவர்னர் உரையில் இடம்பெற செய்ததையும் ராமதாஸ் பாராட்டினார்.
கட்சி வளர்ச்சிக்காக கிராமங்கள்தோறும் செல்ல வேண்டும் என்பதை, ராமதாஸ் எப்போதும் வலியுறுத்துவார். அதன்படி, அன்புமணி கிராமங்கள் தோறும் செல்வதையும் ராமதாஸ் பாராட்டினார்.
பா.ம.க., வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், பசுமை தாயகம் உள்ளிட்ட 34 துணை அமைப்புகளையும் கவனித்து கொள்ளுமாறு, அன்புமணியை ராமதாஸ் கேட்டுக் கொண்டார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராமதாஸ், அன்புமணி சந்திப்பை வரவேற்றுள்ள பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ''அப்பாவும், மகனும் சந்தித்திருப்பது நல்ல அறிகுறி. இதனால், பா.ம.க., வலுவடையும். எப்போதோ நடந்திருக்க வேண்டிய சந்திப்பு; காலம் கடந்து நடந்திருந்தாலும் வரவேற்கத்தக்கது,'' என கூறியுள்ளார்.
அன்புமணி குடும்பத்தினருக்கு, தைலாபுரம் தோட்டத்தில் வத்த குழம்பு, சாம்பார், ரசம், பொரியல், மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி, மட்டன் குழம்பு, 'காடை 65' என, சைவ, அசைவ விருந்து அளிக்கப்பட்டது. தைலாபுரம் தோட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு மேல் சமையலராக உள்ள கீழ் சேவூர் ஜெகதீஷ், அன்புமணி குடும்பத் தினருக்கு சிறப்பு விருந்தை தயார் செய்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan