Paristamil Navigation Paristamil advert login

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு - நயினார் நாகேந்திரன்

25 ஆனி 2026 வியாழன் 13:25 | பார்வைகள் : 189


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-முதல்வர் விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகளையும் டிரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ரூ.40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ரூ.1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?.

மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஜோசப் விஜய், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.