Paristamil Navigation Paristamil advert login

எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன காப்பீடு பாதிக்காது: மத்திய அரசு உத்தரவாதம்

எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன காப்பீடு பாதிக்காது: மத்திய அரசு உத்தரவாதம்

25 ஆனி 2026 வியாழன் 10:12 | பார்வைகள் : 185


வாகனங்களில் தற்போது பயன்படுத்தும் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட, 'இ - 20' பெட்ரோலால் காப்பீடு கோரிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. அவற்றுக்கு விளக்கம் அளித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரேசிலில் பெட்ரோலுடன் 27 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. நாம் தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கிறோம். எதிர்காலத்தில் இதை 85 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தி வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் வாகன காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் பரவின.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் உண்மையில்லை என்றனர். எத்தனால் கலப்பு திட்டம் வாயிலாக கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு நம் நாட்டுக்கு குறைந்ததால், 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

எத்தனால் உற்பத்திக்கான வேளாண் மூலப்பொருட்களுக்கு நிலையான தேவை உருவாகி, விவசாயிகளுக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் பலன் கிடைத்துள்ளது. அறிவியல் ஆதாரங்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், நுகர்வோர் நலனை மையமாக வைத்து பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.