Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் 6 தொகுதி இடைத்தேர்தல்: பணியை துவக்கியது தேர்தல் கமிஷன்

தமிழகத்தில் 6 தொகுதி இடைத்தேர்தல்: பணியை துவக்கியது தேர்தல் கமிஷன்

25 ஆனி 2026 வியாழன் 06:01 | பார்வைகள் : 198


தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தல் தேதிகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய 6 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்ற் எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ளது.

இந் நிலையில், 6 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் வகையில் அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் வேகப்படுத்தி இருக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

இவற்றில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகுதியான விராலிமலைக்கான இயந்திரங்களை பரிசோதனை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

6 தொகுதிகளும் இடம்பெற்றுள்ள கலெக்டர்களிடம் தொகுதி தொடர்பான முழு விவரங்கள் தலைமை தேர்தல் கமிஷன் கோரியிருந்தது. அவை அனைத்தும் விரைவில் அனுப்பும் பணிகள் தொடங்குகின்றன.

இடைத்தேர்தல் தொகுதிகளின் கலெக்டர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஓட்டுப்பதிவு தேதியை தேர்தல் கமிஷன் இறுதி செய்யும். ஓட்டுப்பதிவு நாள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதால் அரசியல் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளன.