மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: முதல்வர் விஜய்
25 ஆனி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 189
எதற்கெடுத்தாலும் கண்மூடித்தனமாக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்,'' என, முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் விஜய் பேசியதாவது:
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொள்கை கொண்டவர்கள் நாங்கள். தற்போது, மத்திய அரசு சார்ந்த கட்சியுடன், அரசியலில் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்கிறோம்; அதற்காக எதற்கெடுத்தாலும் கண்மூடித்தனமாக, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை.
தமிழகத்தின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். அதற்காக கொள்கை, மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்; அதில் உறுதியாக இருக்கிறோம்.
இனியும் அப்படித்தான் இருப்போம். ஒரு போதும் மாற்றம் இருக்காது. இதை திசை திருப்பும் செயலில், யார் ஈடுபட்டாலும், அவர்கள் மக்கள் மத்தியில் தோற்பது உறுதி.
இதில், மக்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் சந்தேகம் வேண்டாம். நாங்கள் யாருக்கும், 'பி டீம்' அல்ல. மக்களுக்கான டீம்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடுவதற்கு, மத்திய அரசிடம் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
'நிடி ஆயோக்' கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிப்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. அண்டை மாநிலங்களுடன் நட்புறவுடன் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் மிகவும் அவசியமானது.
தமிழகம் அண்டை மாநிலங்களுடன் நதி நீர், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், போக்குவரத்து துறைகளில் நல்லுறவை பேணி வருகிறது. அண்டை மாநிலங்களுடன் நட்புறவை வலுப்படுத்த, இந்த அரசு பார்க்கிறது.
கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளையை தடுத்து, அந்த நிதியை ஒன்று ஒன்றாக அரசு கஜானாவிற்கு மாற்றுவோம். மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொட மாட்டேன்; தொடவும் விட மாட்டேன்; தொட்டால் விட மாட்டோம். இதற்கு முன்னர் தொட்டவர்களையும் விட மாட்டோம்.
ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வரின் வேஷமும் கலைந்து விடும் போல இருக்கிறது. அதைப்பார்த்து, நிறைய பேர் நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர்; எங்கள் மீது அவதுாறு பரப்புகின்றனர்.
இப்போது, புதிய ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் தயவில் தான், தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடக்கிறது என்கின்றனர். மக்கள் தயவில் தான், இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சியுள்ள சக்திகள் ஆதரவால், இந்த ஆட்சி நடக்கிறது.
நாங்கள் தான் அவர்களை அனுப்பி வைத்தோம்' என்கின்றனர். அவ்வாறு வந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்தால் கதறுகின்றனர். ஏன் இவ்வளவு கோபம்?
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் தனியாக முடிவெடுத்து, எங்களுக்கு ஆதரவளித்துள்ளன. சமூக நீதி அரசியல் பேசியவர்கள் தங்கள் ஆட்சியில், எத்தனை பட்டியல் சமூகத்தினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தனர்?
நாங்கள் எட்டு பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளோம். அம்பேத்கரின், 100 ஆண்டு கனவு இப்போது நிறைவேறியுள்ளது. பெண்களின் பாதுகாவலர்களாக தங்களை கூறிக் கொள்பவர்கள், எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தனர்?
த.வெ.க., அமைச்சரவையில், நான்கு பெண்களுக்கு இடம் வழங்கியுள்ளோம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அகற்றப்பட்டவர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஊழல் செய்யாமல், நேர்மையாக, நியாயமாக இருப்பவர்களால் மட்டுமே, கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும்.
ஊழலில் ஊறி போனவர்களால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தர முடியாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும், மெஜாரிட்டியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், கூட்டணி ஆட்சியை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
கேட்டால், மக்கள் விரும்பவில்லை என்பர். குடும்பம் குடும்பமாக த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டுப் போட்டது தவறு என்கின்றனர். எம்.ஜி.ஆரை பற்றியும் இப்படித்தான் கூறினர்.
கடந்த, 50 ஆண்டுகளாக, ஒரே, 'டெக்னிக்'கை பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்து வேறு எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதை, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'முதல்வருக்கு பதில் சொல்ல தெரியாது' என நக்கல், நையாண்டி பேசுகின்றனர்.
'சோபா மாடல்' அரசு என, விமர்சனம் செய்வதற்கு விளக்கத்தை புரிந்து கொள்வதற்கே, எனக்கு கொஞ்ச நாளானது. அவர்கள் வேண்டுமானால், அவற்றை விற்றுக் கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan