Paristamil Navigation Paristamil advert login

மகிழ்ச்சியான இல்லறத்தையும் உங்களால் உருவாக்க முடியும்...!

மகிழ்ச்சியான இல்லறத்தையும் உங்களால் உருவாக்க முடியும்...!

22 ஆனி 2026 திங்கள் 16:46 | பார்வைகள் : 166


குடும்ப உறவுகளில் ஏற்படும் பெரிய விரிசல்களுக்கும், விவாகரத்து போன்ற துரதிர்ஷ்டவசமான முடிவுகளுக்கும் கூட, நாம் சாதாரணமாக நினைத்துத் கடந்து போகும் மிகச் சிறிய 'உடைந்த ஜன்னல்கள்' போன்ற சில விஷயங்கள் தான் காரணமாக அமைகின்றன.

முதலில் உறவில் விரிசல் விழுந்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். துணையின் பேச்சை அலட்சியப்படுத்துவது, பொறுப்புகளை ஒருவர் மீது மட்டுமே திணிப்பது, சின்ன விஷயத்திற்கும் கத்துவது அல்லது பேசாமல் 'மௌன விரதம்' இருப்பது போன்றவையே குடும்பத்தின் முதல் உடைந்த ஜன்னல்கள்.

"யார் முதலில் சண்டையைத் தொடங்கியது?" என்று பழிபோட்டுக் கொண்டிருந்தால் அடுத்தடுத்த ஜன்னல்களும் உடையத் தொடங்கும். "யார் தவறு செய்தது?" என்று ஆராய்வதை விட்டுவிட்டு, "இதை எப்படிச் சரி செய்யலாம்?" என்பதில் கவனம் செலுத்தி, ஈகோவின்றி மன்னிப்புக் கேட்பதே உறவை உயர்த்தும்.

முதலாவதாக, கணவன்-மனைவி இடையே ஒரு சிறிய வாக்குவாதம் தோன்றினால், அதை அன்றைய தினமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். "மன்னித்துவிடு", "வருந்துகிறேன்" போன்ற எளிய வார்த்தைகள், உடைந்த ஜன்னலை உடனே ஒட்டும் பசை போலச் செயல்படும். மனஸ்தாபங்களை நாட்கணக்கில் வளர விடுவது ஆபத்தானது.

பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தில் கூடத் துணையையோ அல்லது பிள்ளைகளையோ காயப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. அது உறவின் அடித்தளத்தையே பலவீனமாக்கிவிடும். வீட்டில் எப்போதும் பரஸ்பர மரியாதையைப் பேண வேண்டும். சண்டையின் போது, பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் தோண்டித் துருவிப் பேசக் கூடாது. நடப்புப் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேசவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மொபைல் ஃபோன் மற்றும் சமூக ஊடகங்கள் தான் உறவுகளுக்குள் பெரிய 'உடைந்த ஜன்னலாக' மாறுகின்றன. வீட்டிற்கு வந்த பிறகும், சாப்பிடும் போதும் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துப் பேசும் தரமான நேரத்தை உருவாக்க வேண்டும்.

அடுத்ததாக, பாராட்டை ஒரு நல்ல ஆயுதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூடக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பாராட்டிக்கொள்வது மிகச்சிறந்த பண்பாகும். தேவைப்படும் உதவிகளையும் கூடவே செய்யவேண்டும். இந்தச் சிறிய அங்கீகாரங்கள் குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.

இந்தச் சூத்திரம் மந்திரம்போல வேலை செய்யும். வீட்டிற்குள் நுழையும்போது துணையைப் பார்த்துப் புன்னகைக்க எடுத்துக்கொள்ளும் 3 நொடிகள். துணை பேசும்போது, மொபைலைப் பார்க்காமல் முழுமையாகக் காது கொடுத்துக் கேட்க ஒதுக்கும் சில நிமிடங்கள். ஏதாவது தவறு செய்யும்போது, ஈகோ பார்க்காமல் "சாரி" என்று சொல்லும் 3 நொடிகள். இவைதான் குடும்ப அமைதியைக் காக்கும் எளிய மந்திரங்கள்.

ஜன்னலைச் சரிசெய்த பின் வர்ணம் பூசுவதுபோல, உறவையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். எதிர்பாராத சிறு பரிசுகள், திடீர் வெளிப்பயணங்கள், "உன் சமையல் அருமை" போன்ற ஒற்றை வரிப் பாராட்டுகள் குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை வாரி இறைக்கும்.

இந்த உத்திகளை உங்கள் வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், கணவன்-மனைவிக்கு இடையே பல நாட்களாக நீடிக்கும் மௌன விரதங்களுக்கும், மன கசப்புகளுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும். மிகக் குறைந்த உழைப்பில், தினசரி 3 நொடிகள் காட்டும் அன்பின் மூலம் உங்கள் துணையின் முழுமையான நம்பிக்கையையும், பிள்ளைகளின் முன்னிலையில் ஒரு முன்மாதிரியான மகிழ்ச்சியான இல்லறத்தையும் உங்களால் உருவாக்க முடியும்.