சுய மருத்துவம் ஆபத்தா?
22 ஆனி 2026 திங்கள் 16:08 | பார்வைகள் : 186
நம்மில் பலர் உடல் நலக்குறைவு எனில் மருத்துவரை பார்ப்பதில்லை. டாக்டரிடம் சென்றால் நேரம் ஆகும், மருந்துகள் நிறைய எழுதுவாங்க.. என காரணங்கள் சொல்லிக் கொண்டு மருந்துக் கடைகளில் தாங்களாகவே கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.
படித்தவர்கள் கூட 'கூகுள் சர்ச்' பண்ணி ஆன்லைனில் மருந்துகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவையெல்லாம் தவறான பழக்கங்கள். வலி மருந்துகளான ப்ரூஃபென், காய்ச்சல், உடல்வலி என்றால் பாரசிட்டமால் என வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வலி நிவாரணிகளை மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து உபயோகப் படுத்தும் போது அல்சர், இதயப் பிரச்சனை, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
ஜலதோஷம் பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. எந்தவித மருந்துகள் இல்லாமலும் இவை ஒரு வாரத்தில் சரியாகி விடும். உடனே குணமாக வேண்டும் என்று மருந்துக் கடைக்கு சென்று வலி நிவாரணி, ஆன்டி ஹிஸ்டமின், ஆன்டி பயாடிக்ஸ் என்று மருந்துகளின் ஒரு சேர்க்கையை வாங்குகிறோம். இதற்கு ஆன்டி பயாக்டிக்ஸே தேவையில்லை.
மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, ஒருவரது எடை, கிருமிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும். எனவே ஒருவருக்கு எவ்வாறு மருந்துகள் தர வேண்டுமென்பதை அவர்களது வயது, எடை போன்றவற்றை பொறுத்து மருத்துவரே பரிந்துரை செய்வார்.
ஒரு நோய்க்கு ஐந்து நாட்களுக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் சொல்லும்போது நோயாளி, இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு குணம் அடைந்ததாக மாத்திரைகளை நிறுத்தி விடுவர். இதனால் கிருமிகள் அழியாமல் அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையை அடைந்து விடும். மீண்டும் நோய்க்கு கொடுக்கும்போது அவை வேலை செய்யாது .ஸ்டீராய்ட் சரியாக பயன்படுத்தா விட்டால் சர்க்கரை நோய், கண்புரை நோய் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும். (ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவை கிடைக்கின்றன.
எந்த ஒரு உடல்நல பிரச்சனைகளுக்கும் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆன்டி பயாடிக்ஸை சரியான கால அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் சரியாகி விட்டது என நிறுத்தக் கூடாது.தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், போன்றவற்றுக்கு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை, மருந்துகளை மீண்டும் காய்ச்சல் வந்ததும் தாமாகவே வாங்கி சாப்பிடக் கூடாது.தலைவலி பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது, ஹோமியோபதி, சித்தா என மருத்துவ முறைகளை மாற்றி மாற்றி மருத்துவம் செய்து கொள்வது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.
கைவைத்தியம் ஆக சமையலறை பொருட்களை உபயோகிப்பது நல்லது. ஆனால் அடிக்கடி வரும் நோய் அறிகுறிகள், நீண்ட கால உடல்நலக் குறைவால் அவதிப்படுவோர் நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது அவசியம். தொடர்ந்து சுய மருத்துவம் செய்து கொள்வது ஆபத்தானது. எந்தவித ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
இந்தத் தகவல்களைப் பின்பற்றுவதன் மூலம், தேவையற்ற மருந்துப் பயன்பாட்டைத் தவிர்த்து, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan