அறநிலையத்துறைக்கு சொந்தமான வணிக வளாகங்கள் ரூ.250 கோடி நிலுவை!
22 ஆனி 2026 திங்கள் 10:07 | பார்வைகள் : 130
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோர், 250 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்; அவற்றை விரைவாக வசூலித்து, வருவாயை சீர்படுத்த வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை கூறியுள்ளார். மேலும், அறநிலையத்துறையில் கடந்த ஆட்சியில் அறிவித்து செயல்படுத்த முடியாத திட்டங்களை கைவிடவும் தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோர், வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
அந்த வகையில், வணிக வாடகை பிரிவில் மட்டும் 250 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதை விரைவாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் துறையின் அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்த அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தில், மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது, 'கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது, கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்தால், உள்ளூர் போலீசார் அதை ஏற்பதில்லை. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டுமே பெறுகின்றனர்' என, மண்டல இணை ஆணையர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து, புகார்களை இணையதளம் வழியே அளிக்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், 'கோவில் நிலங்களில் குடியிருப்போரில், ஒவ்வொரு மாதமும், 20 சதவீதம் பேர் மட்டுமே முறையாக வாடகை செலுத்துகின்றனர். மற்றவர்களிடம் நிலுவை தொகை மற்றும் அபராத தொகை வசூலிக்கப் படாமல் உள்ளது.
'வாடகைதாரர்கள் பலர் தங்கள் குடியிருப்பு பகுதிகளை, வணிக நோக்கத்திற்காக மாற்றியும் பயன் படுத்தி வருகின்றனர். அத்தகைய நிலங்களை ஆய்வின் போது கண்டறிந்தால், வணிக ரீதியான வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
'இதுபோல செய்யும் போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குடியிருப்பில் உள்ளவர்கள் தங்களுக்கென தனியாக சங்கம் அமைத்து பிரச்னை செய்வதால், நிலுவை தொகையை சரிவர வசூல் செய்ய முடியவில்லை.
'அத்துடன், 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படியே, முன்னர் நியாயமான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 15 சதவீதம் வாடகையை உயர்த்தவும் முடிவானது.
'ஆனால், 2016க்கு பின் புதிய வாடகை நிர்ணயம் செய்யப்படவில்லை' என்றும் மண்டல இணை ஆணையர்கள் தெரிவித்தனர்.
அவற்றை கேட்டுக்கொண்ட அறநிலையத்துறை ஆணையர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
புதுக்கோட்டை விட்டோபா கோவில், காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் புதிய திருமண மண்டபம் கட்ட, போதிய நிதி வசதி, இட வசதி இல்லாத நிலையில், அவற்றை மேற்கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இது போல பல கோவில்களில், பணி மேற்கொள்ள முடியாத நிலை குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதை தொடர்ந்து, கடந்த ஆட்சியில் சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ள அறிவிப்புகளை கைவிட, அரசுக்கு முன்மொழிவு அனுப்பும்படி ஆணையர் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து, செயல்படுத்த முடியாத அறிவிப்புகள் குறித்த விபரங்களை, உயர் அதிகாரிகளுக்கு கோவில் செயல் அலுவலர்கள் அனுப்பி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan