Paristamil Navigation Paristamil advert login

முறைகேடுகளின்றி குவாரிகளை இயக்க அரசு முடிவு!

முறைகேடுகளின்றி குவாரிகளை இயக்க அரசு முடிவு!

22 ஆனி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 184


மணல் மற்றும் கல் குவாரிகளை முறைகேடுகள் இல்லாமல் இயக்கி, அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்து அறிக்கை தயாரித்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பாலாறு, தாமிரபரணி, காவிரி, கொசஸ்தலை, ஆரணியாறு, வெள்ளாறு உள்ளிட்ட பல ஆறுகளில் மணல் வளம் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக இணையதளமும் உருவாக்கப்பட்டது.

ஆனால், குவாரிகளில் மணல் அள்ளுதல், அவற்றை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தி.மு.க., அரசு, 2021ல் பதவியேற்ற பின்னும், இந்த நடைமுறையே தொடர்ந்தது.

இதனால், பல குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, மணல் எடுத்து விற்பனை செய்யப்பட்டது. அரசுக்கு கிடைக்க வேண்டிய, பல நுாறு கோடி ரூபாய் வருவாய், ஆளும் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் கைமாறியது.

இதையடுத்து, சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறையால், 'ரெய்டு' நடத்தப்பட்டு, ஆவணங்கள், ரொக்கம், நகைககள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்னையால், குவாரிகளை திறக்காமல், தி.மு.க., அரசு மூடி விட்டது.

த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முறைகேடாக நடந்து வரும் கல் குவாரிகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு உள்ளது. அத்துடன் மீண்டும் மணல் குவாரிகள் மற்றும் கல் குவாரிகளை திறப்பதுடன், அவற்றில் முறைகேடில்லாமல் அரசுக்கு வருமானம் ஈட்டுவது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும்படி, நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முந்தைய ஆட்சிகளில், குவாரிகளில் மணல் அள்ளும் பணியை, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்ததே முறைகேடுகளுக்கு காரணம். இந்த முறை, யாருக்கும் கமிஷன் இல்லாமல் குவாரிகளை இயக்கி, அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, குவாரிகளை எப்படி இயக்குவது, அதற்கு தேவையான இயந்திரங்கள், லாரிகளை கொள்முதல் செய்வதா அல்லது வாடகைக்கு எடுப்பதா, அவற்றுக்கு எவ்வளவு செலவாகும் உள்ளிட்ட விபரங்களை, அறிக்கையாக தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அறிக்கை முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் மணல் குவாரிகள், கனிமவள குவாரிகள் படிப்படியாக திறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.