Paristamil Navigation Paristamil advert login

பெற்றோருக்குத் தெரியாமல் நீராட சென்ற மாணவன் பலி

பெற்றோருக்குத் தெரியாமல் நீராட சென்ற மாணவன் பலி

21 ஆனி 2026 ஞாயிறு 13:19 | பார்வைகள் : 243


ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துரதிஷ்டமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளவர் ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற ஹெலம்பவட்டவன மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவனாவார்.

இரண்டு மூத்த சகோதரிகளுடன் குடும்பத்தில் இளைய மகனான சாமிக, கடந்த 19ஆம் திகதி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்து, பின்னர் தனது பாடசாலை நண்பனுடன் காலணி ஒன்று வாங்குவதற்காக ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

சாமிக வீட்டிலிருந்து புறப்படும் போது அவரது தாயும் தந்தையும் வேலைக்காகச் சென்றிருந்ததால் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. சாமிகவின் தந்தை சிலாபம் பிரதேச செயலகத்தில் பணிபுரிவதோடு, தாய் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நண்பனுடன் ஆரச்சிகட்டுவ நகருக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சாமிக, வீட்டிற்குத் தெரியாமல் செங்கல்ஓய வெலிதுடுவ மண்கட பகுதிக்குச் சென்று அங்கு நீராடிக் கொண்டிருந்த போது, செங்கல்ஓயாவின் ஆழமான பகுதியில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சாமிகவுடன் சென்ற நண்பன் தப்பியுள்ளதுடன், அவன் நீரிலிருந்து கரைக்கு வந்து தனது நண்பனைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து விரைவாக அந்த இடத்திற்கு வந்த மக்கள் சாமிகவைத் தேடியுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும், அங்கு திரண்ட மக்கள் இணைந்து நீரில் மூழ்கியிருந்த சாமிகவை மீட்டு ஆனவிழுந்தாவ வைத்தியசாலைக்குச் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்குள்ளாகவே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சாமிகவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெற்றதுடன், அது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாமிகவின் சடலம் நேற்று இரவு வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதுடன், இறுதிச் சடங்குகள் இன்று ஆரச்சிகட்டுவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.