Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல்

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல்

20 ஆனி 2026 சனி 14:49 | பார்வைகள் : 155


அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இடைக்கால அமைதி உடன்படிக்கையை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானில் 19.06.2026 மாலை 4 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

லெபனானில் அண்மைய நாட்களாக தீவிரமடைந்திருந்த மோதல்கள், மத்திய கிழக்கின் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய நிலையிலேயே இந்த அவசர முடிவு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவரான ஸ்டீவ் விட்கோஃப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக சுவிட்சர்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.

லெபனான் மோதல் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை இரத்து செய்திருந்த நிலையில், தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இந்த போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாம் இஸ்ரேலிய தரப்புடன் பேசி இந்த போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதற்றமான சூழலில் சில நேரங்களில் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேரடியாகப் பேசினாரா என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தூதர்கள், ஈரானின் ஒத்துழைப்புடன் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை வடிவமைத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய அதிகாரிகளும், ஹிஸ்புல்லா தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தாத வரை தங்களுக்கு இது போர்க்காலம் அல்ல என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், தெற்கு லெபனானில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து தங்களது படைகளை தற்போதைக்கு விலக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் இஸ்ரேல் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 47 லெபனானியர்கள் கொல்லப்பட்டதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம், லெபனானில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் தனது இராணுவ வீரர்கள் நால்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரம்பியோ ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன், ஜூன் 23 முதல் 25 வரை வொஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் போரினால் இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்திற்கான பிரதான பாதையான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.