Paristamil Navigation Paristamil advert login

எதிர்கட்சி தலைவர் பதவி திரிணமுல் கட்சிக்கு இல்லை; மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு

எதிர்கட்சி தலைவர் பதவி திரிணமுல் கட்சிக்கு இல்லை; மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு

19 ஆனி 2026 வெள்ளி 13:32 | பார்வைகள் : 208


மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜியை நியமித்த சபாநாயகரின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, கொல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் முறையாக பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். தேர்தலில் 80 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, 15 ஆண்டு கால ஆட்சியை இழந்த திரிணமுல் காங்., கட்சி சார்பில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாயா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான ஆதரவு கடிதம் சபாநாயகரிடம் வழங்கப்பட்டது. அதே சமயம், அந்த கடிதத்தில் இருந்த சில எம்.எல்.ஏ.,க் களின் கையெழுத்துகள் போலியானவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சி.ஐ.டி., போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

மறுபுறம், திரிணமுல் காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது. கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்னையை சபாநாயகர் வரை கொண்டு சென்றதாக கூறி, அதிருப்தி எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜி உள்ளிட்டோர் திரிணமுல் காங்., கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து, ரித பிரதா பானர்ஜி தலைமையில் அணிவகுத்த 60 எம்.எல்.ஏ.,க்கள், அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர்; அதற்கான தீர்மானத்தையும், ஆதரவு கடிதத்தையும் சபாநாயகரிடம் வழங்கினர். அதன் அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ரிதபிரதா பானர்ஜி நியமிக்கப்பட்டார்.

மேலும், திரிணமுல் காங்., கட்சியின் லோக்சபா எம்.பி.,க்கள் 28 பேரில், 20 பேர் தேசியவாத இந்திய குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். இதனால், திரிணமுல் காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ரிதபிரதா பானர்ஜியை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த சபாநாயகரின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, திரிணமுல் காங்., சார்பில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி கிருஷ்ணா ராவ் முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனுதாரர் கோரியபடி, அவருக்கு சாதகமான வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை' என கூறி, சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

அதே சமயம், சபாநாயகர் ரதீந்திர போஸின் செயல்பாடுகள் குறித்தும் சில முக்கிய கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

கடந்த மே 9- அன்று, சோபன்தேவ் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, திரிணமுல் காங்., கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை கடிதம் அனுப்பியிருந்தது.

அதை ஏன் சபா நாயகர் கிடப்பில் போட்டார்? ஆனால், ஜூன் 3ம் தேதி அதிருப்தி முகாம் கொடுத்த கடிதத்தின் மீது மட்டும் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்?' என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, 'இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மற்றும் அதிருப்தி முகாம் தரப்பினர் மூன்று வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, திரிணமுல் காங்., தலைவர் மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

திரிணமுல் வங்கி கணக்கு முடக்கமா?

திரிணமுல் காங்., கட்சிக்கு தலைமை ஏற்கப்போவது யார் என்ற போட்டி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. 'இதில் முடிவு தெரியும் வரை, கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பணப் பரிவர்த்தனையோ அல்லது கணக்கு விதிகளில் மாற்றங்களோ செய்யக்கூடாது.

'கட்சியின் நிதியை தவறாக பயன்படுத்தவோ, கையாடல் செய்யவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே, வங்கி கணக்கை முழுதாக முடக்கி வைக்க வேண்டும்' என கோரி, திரிணமுல் காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அரூப் பிஸ்வாஸ், வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். திரிணமுல் காங்., கட்சியின் முன்னாள் பொருளாளர் என்ற முறையில் கடந்த 12ம் தேதி, வங்கி மேலாளருக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.