தென் மாநிலங்களின் இதயம் மேகதாது அணை: தமிழகத்துடன் பேச தயார்! சிவகுமார்
19 ஆனி 2026 வெள்ளி 08:17 | பார்வைகள் : 189
மேகதாது அணை திட்டம், தென் மாநிலங்களின் இதயம். இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்துடன் பேச தயார், என, கர்நாடக முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக சட்ட சபையில் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் ஆற்றிய உரை மூலம், தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இதுகுறித்து, பெங்களூரு விதான் சவுதாவில், கர்நாடக முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
மேகதாது அணை திட்டம், தென் மாநிலங்களின் இதயம். இத்திட்டம் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும்.
இத்திட்டத்தில் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக நன்மை கிடைக்கும்.
தமிழகத்தின் பங்கான 177 டி.எம்.சி., தண்ணீர் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி, மத்திய நீர் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
கர்நாடக விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க வேண்டும். இது, சமநிலை நீர்த் தேக்கம்.
இங்கிருந்து ஒரு வாளி தண்ணீர் கூட எடுக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப் படாது.
பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க மட்டுமே, மேகதாது அணை தண்ணீர் பயன்படுத்தப்படும்.
பெங்களூரில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. கிருஷ்ணா ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடியாது. எங்கள் முன் உள்ள ஒரே வழி காவிரி ஆறு மட்டுமே.
காவிரி விவகாரத்தை கடந்த, 40 ஆண்டுகளாக, தமிழகம் அரசியலுக்கு பயன்படுத்துகிறது. நான் அவர்களின் அரசியலில் தலையிட மாட்டேன்.
கடந்த ஆண்டு, 400 டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. தமிழகம் ஏராளமான அணைகளை கட்டுகிறது. நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தின் மூலம், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது மின்சார துறைக்கும் பயன் அளிக்கும்.
அணை கட்டுவதால் கடினமான காலங்களில், தமிழகத்திற்கு உரிய பங்கு தண்ணீர் திறக்க உதவியாக இருக்கும். தமிழகத்திற்கு விட வேண்டிய தண்ணீரை திறந்து விட்டு உள்ளோம்.
தமிழகத்தில் நடக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், எங்கள் கட்சியும் கூட்டணியில் உள்ளது.
எங்களுக்கு தேவையானதை அவர்களிடம் கேட்போம். இதில், அரசியலுக்கு இடமில்லை. இரு மாநில மக்கள் நலன் தான் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan