Paristamil Navigation Paristamil advert login

Evian நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாடு வெற்றி – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு!!

Evian நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாடு வெற்றி – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு!!

18 ஆனி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 390


Evian நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். உலகளாவிய மோதல்கள் மற்றும் அரசியல் பிளவுகள் நிலவும் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மாநாடு, உலக தலைவர்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா  உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று உக்ரைன் போர், மத்திய கிழக்கு நிலைமை மற்றும் உலக பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

மாநாட்டின் போது உக்ரைனுக்கு ஆதரவை மேலும் வலுப்படுத்த G7 நாடுகள் இணக்கம் தெரிவித்ததாக மக்ரோன் கூறினார். ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அதிகரிப்பதோடு, உக்ரைனின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உரையை அனைத்து நாடுகளும் கவனமாகக் கேட்டதாகவும், எதிர்பார்த்ததை விட உக்ரைன் வலுவாக எதிர்த்து வருவதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மக்ரோன் வரவேற்றார். இந்த ஒப்பந்தம் உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருந்த அசாதாரண அழுத்தங்களை குறைக்கும் என அவர் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா  இணைந்து பாதுகாப்பு கூட்டணியை அமைக்க முனைந்துள்ளதாகவும், பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதேவேளை லெபனானின் இறையாண்மையை பாதுகாக்கவும், காசா மற்றும் மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்தவும் G7  நாடுகள் வலியுறுத்தியுள்ளன.