Paristamil Navigation Paristamil advert login

ராகுலின் தீய, அருவருப்பான மனநிலை வெட்ட வெளிச்சம்; பாஜ தாக்கு

ராகுலின் தீய, அருவருப்பான மனநிலை வெட்ட வெளிச்சம்; பாஜ தாக்கு

18 ஆனி 2026 வியாழன் 08:21 | பார்வைகள் : 251


ராகுலின் தீய அருவருப்பான மனநிலை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை குறித்து கருத்து தெரிவித்ததற்கு பாஜ கடுமையாக சாதி உள்ளது.

இந்தியாவில் நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

டெலிகிராம் தடை - வினாத்தாள் கசிவைத் தடுக்க மோடி அரசு கண்டறிந்துள்ள புதிய தீர்வு இது.சொல்லப்போனால், இது திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரின் வீட்டையே பூட்டி வைப்பதற்குச் சமம்.

பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்புக்காக—குறிப்புகள், மாதிரித் தேர்வுகள், கலந்துரையாடல்கள்  என அனைத்திற்கும் டெலிகிராம் செயலியையே நம்பியுள்ளனர். இந்த வசதியைப் பறிப்பதன் மூலம் வினாத்தாள் கசிவுப் பிரச்னை எப்படித் தீரும்?

மேலும், இது ஒரு முழுமையான தீர்வும் அல்ல. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தெரியும், வினாத்தாள் கசிவு செய்யும் கும்பலுக்கும் தெரியும். அப்படியானால், அடுத்து எதைத் தடை செய்வார்கள்? வாட்ஸ்அப்பையா?

தேர்வு நாளன்று மாணவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்; கத்தரிக்கோலால் பைகள் வெட்டிப் பார்க்கப்படும்; விமானப்படை மூலம் வினாத்தாள்கள் கொண்டு வரப்படும். இப்படிப்பட்ட நாடகங்களுக்குக் குறைவிருக்காது.

இருப்பினும், பிரச்னையின் வேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதே அரசின் கண்காணிப்பில்தான் வினாத்தாள் கசிவு கும்பல் செழித்து வளர்ந்து வருகிறது; இதனால் இளைஞர்கள் வேதனைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மாணவர்களின் குரலுக்கு'ச் செவிசாயுங்கள். இல்லையெனில், தங்கள் உரிமைகளை எப்படிப் பெறுவது என்பது நாட்டின் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு ராகுல் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பாஜ எம்பி சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: ராகுல் பதிவிட்டுள்ள கருத்துக்கள், அவரது தீய மற்றும் மிகவும் அருவருப்பான மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்று நான் கருதுகிறேன்.  

தொடர்ச்சியான தவறான முடிவுகளால் தனது அரசியல் கட்சியைத் தோல்வியடையச் செய்த ஒரு தோல்வியுற்ற தலைவர். இப்போது அவர் இந்த உணர்வுப்பூர்வமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளவும், மாணவர்களின் உணர்வுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார் .