ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி - உலக கிண்ணத்தில் வரலாற்று சாதனைகள்
17 ஆனி 2026 புதன் 14:44 | பார்வைகள் : 131
அல்ஜீரியாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
2026 கால்பந்து உலக கிண்ணத்தின் J பிரிவின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதியது.
அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஆட்டத்தின் 17, 60, 76 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து, ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.
அல்ஜீரியா அணி கோல் அடிக்க முயற்சித்த நிலையில், சிறப்பான தற்காப்பு ஆட்டம் மூலம் அர்ஜெண்டினா வீரர்கள் தடுத்தனர்.
போட்டியின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
அர்ஜெண்டினா அணிக்காக தனது 200 வது சர்வதேச போட்டியில் பங்கேற்கும் லியோனல் மெஸ்ஸி, இதன் மூலம் 6 முறை உலக கிண்ணத்தில் பங்கேற்றுள்ள முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதன் மூலம் உலகக்கிண்ணத்தில் 16 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
பிரேசிலின் ரொனால்டோ 15 கோல்களுடன் 2வது இடத்திலும், எம்பாப்பே மற்றும் கெர்ட் முல்லர் 14 கோல்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் அடித்த 3 வது சர்வதேச வீரர், முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
38 வயதான மெஸ்ஸி, உலகக்கிண்ண தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.
மேலும், அர்ஜென்டினா அணிக்காக உலகக்கிண்ண தொடரில் கோல் அடித்த மிகக் குறைந்த வயது மற்றும் மிக மூத்த வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கடந்த 2006 ஜூன் 16 அன்று செர்பியாவுக்கு எதிராக மெஸ்ஸி தனது 19 வயதில் முதல் உலகக்கிண்ண கோலை அடித்திருந்தார். 20 ஆண்டுகள் கழித்து அதே நாளில் தனது 39வது வயதிலும் 6வது உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan