பழனி கோவிலின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் தப்பித்தது! பத்திரப்பதிவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
17 ஆடி 2026 வெள்ளி 11:36 | பார்வைகள் : 129
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் விற்பனை பதிவுக்கு,
உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் ஆகியோரை ஏமாற்றி, ரிட் மனுவில் ஒரு தரப்பிற்கு சாதகமாக உத்தரவு பெறப்பட்டுள்ளது. விற்பனை பதிவிற்கு
அனுமதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சார் - பதிவாளர்
பதிவு செய்த பத்திரம் செல்லாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள்
அமர்வு உத்தரவிட்டது. இதன் மூலம் பழனி கோவிலின், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள
நிலம் மோசடியிலிருந்து தப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், டி.கே.என்.புதுார் சேதுபதி, திருப்பூர் மாவட்டம், பாப்பாகுளம் வெள்ளத்துரை ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு:நாங்கள் பழனியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள, 1.35 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்கள். ஒருவருக்கு சாதகமாக அந்நிலத்தை விற்பனை செய்தோம். அதற்குரிய பத்திரத்தை பதிவு செய்ய, பழனி தாலுகா இணை - 1 சார் - பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தோம்.
அது தொடர்பாக இரு சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பத்திரத்தை பதிவு செய்ய சார் - பதிவாளர் மறுத்தார். சொத்து உரிமை தொடர்பாக தீர்மானிக்கும் அதிகாரம் சார் - பதிவாளருக்கு இல்லை.
எங்களுக்கு எதிராக தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில், சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பதிவை மறுக்க முடியாது. பத்திரத்தை பதிவு செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர், கடந்த ஏப்., 10ல் பிறப்பித்த உத்தரவு:
ஆவணத்தை பதிவு செய்ய மறுக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆவணம் மற்ற வகையில் முறையாக இருக்கும் பட்சத்தில், விற்பனை பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் தக்கார் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
தனி நீதிபதியின் உத்தரவு சட்டத்திற்கு முரணானது. சிவில் வழக்கில் நாங்கள் ஒரு எதிர்மனுதாரர். அவ்வழக்கு சொத்து தொடர்பான விஷயத்திற்காக, எங்களுக்கு தெரியாமல் ரிட் மனுவை தாக்கல் செய்தது முறையற்றது.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்காமல், ஆரம்ப கட்டத்திலேயே ரிட் மனுவை தனி நீதிபதி அனுமதித்திருக்கக்கூடாது. அறநிலையத்துறை கமிஷனர் 1999ல் பிறப்பித்த உத்தரவின்படி, தண்டபாணி சுவாமி மடத்தின் தக்காராகநியமிக்கப்பட்டேன்.
இதை எதிர்த்து தண்டபாணி அய்யா என்பவர் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்த ரிட் மனுவில், எங்களை ஒரு தரப்பாக சேர்க்காதது சட்டவிரோதம்.
சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பாக பதிவுத்துறை எந்தவொரு ஆவணத்தையும் பதிவு செய்ய ஏற்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, எங்கள் தரப்பில் தாக்கல் செய்த ரிட் மனு நிலுவையில் உள்ளது. இதை சார் - பதிவாளர் தெரிவிக்க தவறியதை, தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட சொத்தின் உடைமை, தக்கார் வசம் உள்ளது என்ற உண்மையை ரிட் மனுதாரர்கள் மறைத்துள்ளனர். விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய அனுமதித்ததால், தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்.
பழனி அடிவாரம் சன்னிதி சாலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலம் தொடர்பான உண்மையான நிலவரத்தை உறுதி செய்யாமல், பதிவு செய்ய தனி நீதிபதி அனுமதித்திருக்கக்கூடாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கோவிந்தராஜன், முரளி ஆஜராகி, 'பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது; அதை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் ஆகியோரை ஏமாற்றி, ரிட் மனுவில் உத்தரவு பெறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவிற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் முத்திரை தீர்வை தொகையை சரியாக செலுத்த தவறியுள்ளனர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சார் - பதிவாளர் பதிவு செய்த பத்திரம்செல்லாது.இவ்வாறு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் மூலம், பழனி கோவிலின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மோசடியிலிருந்து தப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் ஆகியோர்வரவேற்றுள்ளனர்.
சார் - பதிவாளரை கைது செய்ய தடை
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம், சிலரால் விற்பனை செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் சதி செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக, சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன் மீது, பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து, சார் - பதிவாளர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆவணத்தை பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து இந்நீதிமன்றத்தில் சிலர் மனு செய்தனர். மறுத்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி, 'ஆவணம் முறையாக இருக்கும் பட்சத்தில் விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்' என, ஏப்., 10ல் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை, நீதிபதி கே.ராஜசேகர் விசாரித்தார். அரசு வழக்கறிஞர், 'வழக்கு விசாரணை சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஏ.டி.ஜி.பி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்றார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,யை ஒரு தரப்பாக இந்நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்த்துக்கொள்கிறது. அதன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டநிலையில், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire