Paristamil Navigation Paristamil advert login

தவெக ஆட்சியில் கமிஷன் கலாசாரத்துக்கு இடமில்லை; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

தவெக ஆட்சியில் கமிஷன் கலாசாரத்துக்கு இடமில்லை; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

17 ஆடி 2026 வெள்ளி 10:30 | பார்வைகள் : 145


தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாசாரத்திற்கு இடமில்லை; தவெக ஆட்சியில் கமிஷனே கிடையாது,'' என, அமைச்சர் நிர்மல்குமார்  தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: லாக்கப் மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; கடந்த ஆட்சியில் லாக்கப் மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. நாகர்கோவில் சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை எடுக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. தவறு செய்த எவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். லாக்கப் மரண வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன. எங்களுடைய எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்து இருக்கிறது. ரூ.50 கோடி வரை விலை பேசப்பட்டு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க தினந்தோறும் முயற்சி செய்கின்றனர்.

இன்னும் ஒரு வருடங்களுக்கு பிறகு, திமுகவும், அதிமுகவும் கட்சியை நடத்த முடியாமல்  பாஜவுடன் இணைத்துவிட்டு ஸ்டாலின் குடும்பத்தில் இரண்டு பேருக்கும், இபிஎஸ் குடும்பத்தில் இரண்டு பேருக்கும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட்டு போகும் நிலைமை வந்துவிடலாம். இது இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நடக்கும். கட்சியை நடத்தும், காப்பாற்றும் எண்ணம் இல்லை.

தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாசாரத்திற்கு இடமில்லை; தவெக ஆட்சியில் கமிஷனே கிடையாது. முந்தைய ஆட்சியில் திருவான்மியூர்-உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

கடந்த 5 ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாக  சீரமைக்கப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு துறையில் ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.