Paristamil Navigation Paristamil advert login

நெத்திலி மீன் தொக்கு

நெத்திலி மீன் தொக்கு

16 ஆடி 2026 வியாழன் 16:23 | பார்வைகள் : 142


மீன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, மீனில் பல சுவையான மீன் வகைகள் உண்டு. அதிலும் சிறியதாக இருக்கும் நெத்திலி மீன் என்றால் சொல்லவா வேண்டும், சிறியதாக இருந்தாலும் அதன் சுவை அலாதி தான். நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்.அந்தவகையில் நெத்திலி மீன் கொண்டு செய்யப்படும் தொக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த நெத்திலி மீன் தொக்கை சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :
.
நெத்திலி மீன்
புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு பற்கள் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
சின்ன வெங்காயம் - 20 முதல் 25
பழுத்த தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு பற்கள் - 10
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை :
அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் கடாய் வைத்து 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலாக்கள் கெட்டியாக தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் நன்றாக அலசிய நெத்திலி மீனை சேர்த்து கலந்து வேகவிடவும்.
பின்னர் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடாயை மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.

மீன் நன்கு மென்மையாக வெந்து தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் பிரட்டி எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட ரெடி..