Paristamil Navigation Paristamil advert login

ரூ.2.19 லட்சம் கோடி மதிப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.2.19 லட்சம் கோடி மதிப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

16 ஆடி 2026 வியாழன் 11:35 | பார்வைகள் : 124


பிரதமர் மோடி தலைமையில் நடந்த  மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,  செமிகான் 2.0, மொபைல் போன் உற்பத்தி திட்டம், உரம் தொடர்பான தேசிய முதலீட்டு கொள்கை, உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.2.19 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

இன்றைய கூட்டத்தில் ஏழு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு திட்டங்கள் வாரணாசியுடன் தொடர்புடையவை.

வருணா நதிக்கரையோரம் 6/4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு  10 ஆயிரத்து 998 கோடி ரூபாய். கங்கை நதிக்கரையோரத்தில் 14 ஆயிரத்து 448 கோடி ரூபாயில் ஆறு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

செமிகண்டக்டர் 2.0 திட்டத்திற்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொபைல்போன் உற்பத்தி திட்டத்திற்கு 62 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

உரம் குறித்த தேசிய முதலீட்டு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.  இந்த திட்டம் உரம் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வது ஆகும்.  இந்த திட்டத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிசாவின் பாரதீப் - ஹரிதாஸ்பூர்  இடையில் ரயில் பாதை அமைக்க 2 ஆயிரத்து 542 கோடி ரூபாயும், ஜார்க்கண்டின்  டன்கோவாபோசி முதல் ராஜ்கோர்சவா வரையில் 4வது ரயில் வழித்தடம் அமைக்க ஆயிரத்து 365 கோடி ரூபாய் ஒதுக்கவும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மொபைல் போன் உற்பத்தி

அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,

ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 125 கோடி மொபைல்போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம்  மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி  திட்டத்திற்கு 62 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்  மொபைல் போன் மதிப்பு  ரூ.39 லட்சம் கோடியாக  அதிகரிக்கும். மேலும் ஏற்றுமதி மதிப்பானது 7.5 லட்சம் கோடியில் இருந்து 15 லட்சம் கோடியாக அதிகரிப்பதுடன், 60 ஆயிரம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.