Paristamil Navigation Paristamil advert login

9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு : தமிழகத்துக்கு 950 இடங்கள்

9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு : தமிழகத்துக்கு 950 இடங்கள்

16 ஆடி 2026 வியாழன் 10:34 | பார்வைகள் : 125


தமிழகத்தில் 950 இடங்கள் உட்பட, நாடு முழுதும் 9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுதும் புதிய மருத்துவ கல்லுாரிக்கான அனுமதி மற்றும் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்புக்கான அறிவிப்பை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும், 441 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,111 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 382 தனியார் கல்லுாரிகளில், 7,800 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும், 25 புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், 823 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 36,939 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தலா, 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக, காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் ஏபிஎஸ் மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள, 37 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 150 இடங்கள் அதிகரித்து, 5,349 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், 41 தனியார் கல்லுாரிகளில் 800 இடங்கள் அதிகரித்து, 8,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மொத்தமாக, 78 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 950 இடங்கள் அதிகரித்து, 13,999 இடங்கள் உள்ளன.


மாநில சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, தமிழகத்துக்கு அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன. மருத்துவ உட்கட்டமைப்பு, பேராசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த, தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜ் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், த.வெ.க.,