இலங்கையில் விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை
15 ஆடி 2026 புதன் 18:05 | பார்வைகள் : 138
தற்போது நிலவும் பட்டம் விடும் பருவகாலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டம் விடுவது கணிசமாக அதிகரித்துள்ளது. இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகளவில் இடம்பெறும் விமான விபத்துகளுக்கு, ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடி இடையூறாகவும் அமைகிறது.
இலங்கையின் கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சூழவுள்ள வான்பரப்பில் இவ்வாறு அதிகளவில் பட்டம் விடப்படுவது தற்போது பெரும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், இன்றைய தினம் (2026.07.15) இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சி நடவடிக்கைகளுக்காக வானில் எழும்பிய Y-12 ரக விமானம் ஒன்று, பட்டத்தின் நூல்களால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், வான்பரப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலையடுத்து உடனடியாக அவசரமாக இரத்மலானை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனைகளின் போது, அந்த விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களில் பட்டத்தின் நூல்கள் பெருமளவில் சுற்றியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் எஞ்சினுக்குள்ளோ அல்லது அதன் முக்கிய செயல்பாட்டு அமைப்புகளுக்குள்ளோ பட்டத்தின் நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ சிக்கிக்கொண்டால், ஒட்டுமொத்த விமானமும் விபத்துக்குள்ளாகும் நேரடி ஆபத்து உள்ளது. இதன் மூலம் பாரிய உயிர்ச்சேதங்களும் சொத்துச்சேதங்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும்.
எனவே, வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், இத்தகைய வான் பாதுகாப்பு வலயங்களுக்குள் பட்டம் விடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire