Paristamil Navigation Paristamil advert login

மேற்காசியாவில் வான்பரப்பு மூடல் - நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் விமானங்கள்

மேற்காசியாவில் வான்பரப்பு மூடல் - நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் விமானங்கள்

15 ஆடி 2026 புதன் 14:15 | பார்வைகள் : 148


நேற்றிரவு மேற்காசியாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற நிலை மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், தத்தமது இலக்குகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட்டு இன்று (15) புதன்கிழமை காலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பத்திரமாகத் திரும்பியுள்ளன.

இச்சம்பவம் குறித்த விபரங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவனத் தொடர்பாடல் பிரிவு முகாமையாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நேற்று (14) மாலை 5:10 மணியளவில் UL229 என்ற விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.

நேற்று மாலை 6:36 மணியளவில் UL253 என்ற விமானம் சவூதி அரேபியாவின் தம்மாம் கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.

இந்த இரு விமானங்களும் அதிநவீன 'ஏர்பஸ் ஏ321நியோ' ரகத்தைச் சேர்ந்தவையாகும்.

இந்த விமானங்கள் மேற்காசியப் பகுதியை நெருங்கிய வேளையில், ஈரான் பிராந்தியம் முழுவதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடின.

உடனடியாகத் தங்களது இலக்கு விமான நிலையங்களை நோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், இரு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்பரப்பிற்கு அருகில் சுமார் 1 மணிநேரம் 10 நிமிடங்கள் வரை நடுவானில் வட்டமடித்தவாறு காத்திருந்தன.

வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் இரு விமானங்களையும் தத்தமது இலக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

இந்தத் தற்காலிக வான்பரப்பு மூடல் காரணமாக மேலும் பல சர்வதேச விமானங்களும் நடுவானில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தத்தமது இலக்குகளில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், அந்த இரு விமானங்களும் இன்றையதினம் காலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.