பெல்ஜியத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் கட்டடத்தில் தீ விபத்து! மின்தூக்கியில் சிக்கி 6 பேர் சடலமாக மீட்பு
15 ஆடி 2026 புதன் 12:11 | பார்வைகள் : 137
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியிலிருந்த 'ஒக்ஸி டவர்' என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக் கோபுரக் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (14) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை சுமார் 08:00 மணியளவில் இந்தக் கட்டிடத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், தீயானது கட்டிடத்தின் மின்தூக்கி பகுதிக்குள்ளும் பரவியதைக் கண்டறிந்துள்ளனர். இதன்போது இரு மின்தூக்கிகள் இயங்க முடியாமல் சிக்கியிருந்தன.
பல மணிநேரம் நீடித்த மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஒரு மின்தூக்கியை உடைத்துத் திறந்து பார்த்த போது, அதற்குள் 6 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
முன்னதாக, கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த குறைந்தது 6 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் இந்த மின்தூக்கிக்குள்ளேயே உயிரிழந்திருக்கலாம் என பிரஸ்ஸல்ஸ் தொழிலாளர் சட்டதரணி அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் ப்ரெக்ட் ஸ்பெய்ப்ரூக் தெரிவித்துள்ளார். மேலும், மற்றுமொரு மின்தூக்கியிலும் யாராவது சிக்கியிருக்கலாமா என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்தத் தீ விபத்தில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்குள்ளான இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும், மீட்புப் பணியின் போது கடுமையான வெப்பத் தாக்கத்திற்கு ஆளான தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, பெல்ஜியத்தின் பிலிப் மன்னர் மற்றும் பிரதமர் பார்ட் டி வெவர் ஆகியோர் பிற்பகலில் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸ் மேயர் பிலிப் க்ளோஸ் மிகக் கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாகச் செயலாற்றிய அவசர மீட்புப் படையினருக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய சதுக்கமான 'கிராண்ட் பிளேஸ்' பகுதியிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் இந்த 'ஒக்ஸி டவர்' அமைந்துள்ளது.
தற்பொழுது கட்டுமானத்தில் இருக்கும் இக்கோபுரம், எதிர்காலத்தில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளைக் கொண்ட ஒரு மாபெரும் வளாகமாக உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire