ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு: மத்திய அரசு கண்டனம்
15 ஆடி 2026 புதன் 11:37 | பார்வைகள் : 132
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியர்கள் சென்ற கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் துவங்கி உள்ளது. இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடி உள்ளது.இதனிடையே, அந்தவழியாக சென்ற எம்டி எல் பஹியாக் மற்றும் எம்டி மோம்பஸா ஆகிய கப்பல்கள் மீது ஈரான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதில் இருந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்று காலை, டில்லியில் உள்ள ஈரானின் துணைத்தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. நேரில் வந்த அவரிடம், இந்தியாவின் வலிமையான கண்டனத்தை தெரிவித்தோம்.
கடல் பணியாளர்களை குறிவைக்கும் வகையிலும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழி வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறோம்.
மேற்காசியாவில் தாக்குதல் மீண்டும் துவங்கி உள்ளதும், மோதல் தீவிரம் அடைந்துள்ளதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதி செய்யும் வகையில், வன்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire