Paristamil Navigation Paristamil advert login

கம்யூ., கட்சிக்குள் கலகம் மூட்டியது திமுக

கம்யூ., கட்சிக்குள் கலகம் மூட்டியது திமுக

15 ஆடி 2026 புதன் 06:17 | பார்வைகள் : 239


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், திமுக, குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அணி மாறி ஆதரவு அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அமைச்சரவையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறாவிட்டாலும், திமுக, கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டன. இ.கம்யூ., - மா.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து, இடதுசாரி ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளன.

வரும் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், திமுக குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இ.கம்யூ., வட்டாரங்கள் கூறியதாவது:

தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், திமுகவுக்கு ஆதரவாக இ.கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன், சுப்பராயன் எம்.பி., பேசி வருகின்றனர். அவர்களை வைத்து, கட்சியில் குழப்பத்தை, திமுக உருவாக்கி வருகிறது.

தஞ்சாவூரில், ஒரு திருமண விழாவில் பேசிய முத்தரசன், 'ஸ்டாலின் அன்று போல் இன்றும் சோர்வின்றி இயங்குகிறார். திமுகவுடன் பேச்சு தொடரும்' என்றார்.

இதுபோல, கரூர் சம்பவத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது, 'அதிகார துஷ்பிரயோகம்' என சுப்பராயன் விமர்சித்துள்ளார்.

இ.கம்யூ., கட்டுப்பாட்டு குழு தலைவராக இருக்கும் சுப்பராயன், நீதிபதி போல் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால், கட்சியில் குழப்பத்தை உருவாக்கும் வகையில், கருத்துகளை கூறுகிறார்; பின்னணியில் திமுக இருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.