Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் செங்கோட்டையனுடன் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் சந்திப்பு

அமைச்சர் செங்கோட்டையனுடன் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் சந்திப்பு

15 ஆடி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 144


லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், தவெகவை சேர்ந்த அமைச்சர் செங்கோட்டையனை, தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசியது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலில், தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கட்சி தலைமை உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்களில் சிலர், பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.வில் இணைந்தனர்.

இதுவரை, மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து, 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

அதிமுகவில் இருந்து, எம்எல்ஏக்களை இழுப்பதால், குதிரை பேரம் நடப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், எம்எல்ஏக்களை இழுக்கும் முதல்வர் விஜய், களவாணி,' என கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், 13 தொகுதிகள் வரை இடைத்தேர்தல் நடத்த, தவெக தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன் வாயிலாக, சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தாண்டி, தவெகவின் பலம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

இதற்காக, மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களை, தங்கள் பக்கம் இழுக்க பேச்சு நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட சிலர், இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதால், விரைவில் கட்சி தாவல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ், தலைமைச் செயலகம் வந்தார். அங்கு, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறைக்கு சென்றார். அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. சந்திப்புக்கான காரணம் குறித்து, இரு தரப்பினரும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

அதிமுகவில் இபிஎஸ் மீது எழுந்த அதிருப்தியால், சட்டசபை தேர்தலுக்கு முன் தவெகவுக்கு தாவி, தேர்தலில் வென்று அமைச்சரானவர் செங்கோட்டையன். அவரை, அதிமுகவைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ லீமா ரோஸ் திடீரென சந்தித்தது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.