Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் - ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் - ட்ரம்ப்  அறிவிப்பு

14 ஆடி 2026 செவ்வாய் 11:39 | பார்வைகள் : 167


அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் ஈரான் அதன் இராணுவத் திறன்களையும் அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மறைந்த உயர் தலைவரான அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியும் 90 சதவீதம் இல்லாமற்போய்விட்டார் என்றும் கூறியுள்ளார்.

ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போதே ட்ரம்ப் இவ்விதமாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்,  “ஈரானிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, எல்லாம் போய்விட்டது. அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அழிந்துவிட்டன. அவர்களின் மிகச் சிறந்த தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமேனி கொல்லப்பட்டார். அத்தோடு, அவ்வேளை நடத்தப்பட்ட  தாக்குதல்களில் அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனியும் பலத்த காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

காயமடைந்த மொஜ்தபா காமேனி அதன் பின்னர் பொதுவெளிக்குச் செல்லவில்லை. எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட மொஜ்தபா காமேனி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர் வசிக்கும் இடம் குறித்த உறுதியான தகவல்களும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.

ஈரான் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளில் ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சில மாதங்களாக நீடித்த போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் இராணுவ நடவடிக்கைகளில் மீண்டும் இறங்கின. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பாரியளவில் நடத்தப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஈரானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.