Paristamil Navigation Paristamil advert login

புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதில் நிபந்தனை!

புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதில் நிபந்தனை!

14 ஆடி 2026 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 121


புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான 'படிவம் -- 6'ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்கும் போது, பெற்றோரின் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் மேற்கொள்ளப்பட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.

கடந்தாண்டு பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு முன், எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அடுத்தபடியாக தமிழகம், கேரளா, உ.பி., மேற்கு வங்கம், புதுச்சேரி உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில், இறந்தவர்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் என, 5.58 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த சூழலில், ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்படும் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான 'படிவம் - 6'ல், பெற்றோரின் எஸ்.ஐ.ஆர்., விபரங்களையும் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையை தேர்தல் கமிஷன் தற்போது விதித்துள்ளது.

இது குறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:

புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, தங்கள் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய வாக்காளர் அட்டை விபரங்களை சமர்ப்பித்தால் போதும். இனி, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பெற்றோரின் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவத்தில், 'ஜே' மற்றும் 'கே' பகுதிகளுக்கு இடையே, பெயரிடப்படாத புதிய அறிவிப்பு இடம்பெறும்.

eகடந்த எஸ்.ஐ.ஆர்., பணியின் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில், விண்ணப்பிக்கும் நபரின் பெயர் இடம்பெற்றதா என்பதை குறிப்பிட வேண்டும். மேலும், அவர்களின் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோரில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருந்ததா என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும்.

பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அது தொடர்பான சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி எண் மற்றும் வரிசை எண் ஆகிய விபரங்களை விண்ணப்பிப்போர் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

எஸ்.ஐ.ஆர்., விபரம்

இந்த அறிவிப்பு கட்டாயமானது என இதுவரை குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த பகுதியை பூர்த்தி செய்யாமல், விண்ணப்பதாரர்களால் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது.

ஆனால், இந்த நடைமுறை நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் இல்லை; ஆன்லைனில் விண்ணப்பிப்போரிடம் மட்டுமே பெற்றோரின் எஸ்.ஐ.ஆர்., விபரம் கோரப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1950ன் கீழ் உருவாக்கப்பட்ட வாக்காளர் பதிவு விதிகள் - 1960ன்படி, சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களிடம் கலந்து ஆலோசித்த பின், உரிய ஒப்புதலுடனேயே படிவம் - 6ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த சூழலில், எந்த ஒப்புதலும் இல்லாமல் தேர்தல் கமிஷனின் இணையதள பக்கத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் - 6ல் மாற்றம் செய்திருப்பது, விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.