திமுக மாஜி அன்பரசன் மீதான நில அபகரிப்பு புகார்; போலீஸ் விசாரணை துவக்கம்
14 ஆடி 2026 செவ்வாய் 07:25 | பார்வைகள் : 135
திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது அளிக்கப்பட்ட நில அபகரிப்பு புகார் குறித்து, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்ற தனியார் நிறுவன உரிமையாளர், முதல்வர் தனிப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், அவர் கூறியதாவது:
சென்னை பரங்கிமலையில், எனக்கு சொந்தமான 5,500 சதுரடி நிலத்தில், கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதவியாளர்கள், தேர்தல் பணிமனை அமைத்துக் கொள்வதாக கூறினர். என்னை கட்டாயப்படுத்தி, ஆறு மாதம் குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்தனர். குத்தகை காலம் முடிந்த பிறகும், இடத்தை காலி செய்ய மறுத்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை தராமலும் உள்ளனர். குத்தகை ஒப்பந்தம் செய்தவர் முகவரிக்கு சென்று பார்த்தபோது, போலி முகவரி என தெரிய வந்தது. தேர்தல் பணிமனை என்ற பெயரில், என் நிலத்தை அபகரித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி, தா.மோ.அன்பரசன் என்னை சந்தித்தார். அப்போது, 'அந்த இடத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள்; நான் பணம் தந்து விடுகிறேன்' என்றார். நான், 'அந்த நிலத்தை விற்க விருப்பமில்லை' என, அவரிடம் தெரிவித்து விட்டேன்.
ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறி சென்றவர், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. அன்பரசன் பின்னணியில் தான், என் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகார் மனு, பரங்கிமலை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புகாருக்கு, சி.எஸ்.ஆர்., எனும் ஏற்பு ரசீது வழங்கி, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக, பரங்கிமலை துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire