Paristamil Navigation Paristamil advert login

ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: உரிமையாளர்களை தேடும் ஈ.டி., அதிகாரிகள்

ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: உரிமையாளர்களை தேடும் ஈ.டி., அதிகாரிகள்

14 ஆடி 2026 செவ்வாய் 06:24 | பார்வைகள் : 237


எப்போதும் இல்லாத வகையில், 2025 - 26ம் நிதியாண்டில், நாடு முழுதும் முறைகேடு புகார்கள் தொடர்பாக, 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில், அமலாக்கத் துறை பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைக்கும்.

முடக்கப்படும் சொத்துக்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் வரவில்லை என்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யும்போது, சொத்துக்கள் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்படும்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் தான், அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் அதிகமாக புழங்கும் நிலையில், இத்துறை தொடர்பாக கண்காணிப்பை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகளும் கருப்பு பணத்தை பதுக்க, பினாமிகள் பெயரில் சொத்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சமீப காலமாக அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகளில், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தான் அதிகமாக பிடிபடுகின்றன. இந்த வகையில், 2025 - 26ம் நிதி ஆண்டில், நாடு முழுதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் மற்றும் நொடிப்பு நிலை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், சொத்துக்களின் உரிமையாளர்கள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  இதில், உரிமையாளர் யார் என்ற விபரங்கள் தெளிவாகாத நிலையில், 81,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் யார் வாயிலாக, யார் பெயரில் வாங்கப்பட்டன; அதற்கான பணம் எப்படி கைமாறியது என்பது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், அதிக அளவுக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது, ரியல் எஸ்டேட் துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.