வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்
13 ஆடி 2026 திங்கள் 19:12 | பார்வைகள் : 166
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக, புதிய ஓய்வூதியத் திட்டமொன்று விரைவில் உருவாக்கப்படுமென வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன முன்வைத்த தனியார் உறுப்பினர் பிரேரணைக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதனை வலியுறுத்தினார்.
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவான வெளிநாட்டு பணஅனுப்பல்கள் பதிவாகியிருந்த போதிலும், தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் வெறும் 307 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அதன் பயனளிக்கும் தன்மையில் உள்ள சவால்களை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வாக இப்புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டத்தை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் சேவைக் காலம் மற்றும் வருமான நிலையை அடிப்படையாகக் கொண்டு, தேர்வு செய்யக்கூடிய நெகிழ்வான விருப்பத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன்படி, சேவை காலம் நிறைவடைந்த பின் மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது காலாவதியின் பின்னர் ஒருமுறை வழங்கப்படும் நிலையான தொகையாகவோ நலன்களைப் பெறுவதற்கான சுதந்திரம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், குவைத் நிதியிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ. 2.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றத்துடன் இணைந்து, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டபூர்வமான வழிகளில் நாட்டுக்கு அனுப்பும் பணப்பரி மாற்றங்களைத் துல்லியமாகப் பதிவு செய்வதற்காக, எதிர்காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பணஅனுப்பல் அறிக்கையை (Remittance Report) பெற்றுக்கொள்ள டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire