Paristamil Navigation Paristamil advert login

“ஓடி, ஒளியும் பழக்கம் எனக்கு இல்லை” - சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு பேட்டி!

“ஓடி, ஒளியும் பழக்கம் எனக்கு இல்லை” - சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு பேட்டி!

13 ஆடி 2026 திங்கள் 13:02 | பார்வைகள் : 129


“ஓடி, ஒளியும் பழக்கம் எனக்கு இல்லை. அரசியலை அரசியலாக சந்திக்க திமுக என்றும் தயங்கியதில்லை.” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்கும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்கவில்லை. அரசியலை அரசியலாக சந்திக்க திமுக என்றும் தயங்கியதில்லை.

2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறேன். 2016-ம் ஆண்டு முதன் முறையாக நான் அங்கு சென்று சிகிச்சை பெற்றேன். அதன் பிறகு தொடர்ந்து அங்கு சென்று வருகிறேன். 2023-ம் ஆண்டு சென்று அதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

தேர்தலுக்கு பின், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், விசாவுக்கு விண்ணப்பித்தேன். கடந்த மாதம் 17-ம் தேதி எனக்கு விசா கொடுக்கப்பட்டது. அன்றைய தினமே 25-ம் தேதி செல்வதற்காக இன்டிகோ விமானத்தில் டிக்கெட் போட்டுவிட்டேன். அன்று காலை 7 மணிக்கு காவல்துறையினர் என் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர்.

காவல்துறை அதிகாரியிடம் சிங்கப்பூர் செல்ல டிக்கெட் எடுத்திருக்கிறேன் என சொல்லியிருந்தேன். காவல்துறை சோதனை காரணமாக 26-ம் தேதி சிங்கப்பூர் கிளம்பினேன். எனக்கு பல பிரச்சினைகள் உண்டு. அலர்ஜி பிரச்சினை, நியூரோ பிரச்சினை, ஹார்ட் உள்ளிட்ட பிரச்சனைகள் எனக்கு உள்ளது. அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பது குறித்து ஒரு முறை தடுப்பூசி செலுத்தினால் மூன்று நாள் சோதனை செய்வார்கள். அதில் 3 நாட்கள் சென்றுவிட்டது. 29-ம் தேதி நியூரோ பிரச்சனை காரணமாக நரம்பியல் மருத்துவர் ஆலோசனை பெற்றேன். 30-ம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன்.

மூன்றாம் தேதி இதய மருத்துவ ஜெயராமன் அவரிடம் மருத்துவ பரிசோதனை பெற்றேன். ஒன்பதாம் தேதி வரை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றது. எனக்கு சம்மன் வந்ததாக தெரிந்துகொண்டேன். அதற்கு 10 நாட்கள் அவகாசம் கோரி கடிதம் எழுதினேன். இதில் நான் எங்கு ஒளிந்தேன். எங்கு ஓடினேன். மருத்துவத்துக்காக தான் சிங்கப்பூர் சென்றேன். யாருக்கு பயந்தோ எங்கும் செல்லவில்லை.” என்றார். மேலும், “15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நீதிக்கு தலைவணங்குவேன். நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு” என்றும் தெரிவித்துள்ளார்.