ஏவுகணை தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு
13 ஆடி 2026 திங்கள் 10:47 | பார்வைகள் : 131
ராணுவ உற்பத்தி கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் ஏவுகணைகளை உள்நாட்டு தனியார் நிறுவனங்களே தயாரிக்கவும், மேம்படுத்தவும் அனுமதி வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதுவரை பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த இந்த பிரிவு, தற்போது முதன்முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விமானம், ஆளில்லா சிறிய விமானங்கள், பீரங்கிகள் மற்றும் கடற்படை தளவாடங்கள் தயாரிப்பில், தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இந்நிலையில், ஏவுகணை தயாரிப்பிலும் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, ராணுவ துறையின் மிக உன்னதமான சீர்திருத்தமாக கருதப்படுகிறது.
டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ள, 'அஸ்த்ரா மார்க் - 2' ஏவுகணையை வாங்க தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
'அஸ்த்ரா மார்க் - 2' என்ற எல்லைக்கு அப்பாற்பட்ட இலக்குகளை தாக்கும் வான் ஏவுகணையை தயாரிப்பதற்காக, ராணுவ அமைச்சகம் விரைவில் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. 'டாடா குரூப், அதானி, பாரத் போர்ஜ், மஹிந்திரா குரூப், ஐகாம்' ஆகிய நிறுவனங்களுக்கு அழைக்கு விடுக்கப்படும் என, தெரிகிறது.
நம் ஆயுதப் படைகள் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து ஏவுகணைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனமான, 'பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தால் மட்டும் இந்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
'அஸ்த்ரா மார்க் - 2' ஏவுகணை, 180 - 200 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் திறனுடையது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய நீண்ட துார, 'பி.எல்., -15 இ' ஏவுகணையை முறியடிப்பதற்காக, இது டி.ஆர்.டி.ஓ.,-வால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த ஏவுகணையை, 'தேஜஸ் மார்க் 1-ஏ, மிக் -29, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்களில் பொருத்தலாம்.
'அஸ்த்ரா மார்க் - 2' ஏவுகணையை தொடர்ந்து, 'பிரளய்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பையும் தனியார் துறையிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுகணை, 500 கி.மீ., துாரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுடையது. ஒலியின் வேகத்தை விட, 6 மடங்கு அதிவேகத்தில் செல்லக்கூடிய இரு- அடுக்கு ஏவுகணை.
ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பதுடன், நாட்டின் வான் பாதுகாப்பு வலையமைப்பையும் மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது. கடற்படை கப்பல்களை பாதுகாப்பதற்காக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து நீண்ட துார மேற்பரப்பில் இருந்து வான்வழி தாக்கும் ஏவுகணையை உருவாக்கி வருகின்றன.
பாக்., பயன்படுத்தும் துருக்கியின் ட்ரோன்கள் மற்றும் சீன ராணுவ படைகளின் ஏவுகணைகளை எதிர்கொள்ள பல்லடுக்கு பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஐந்தாவது, 'எஸ் - -400' வான் பாதுகாப்பு அமைப்பு வரும் நவம்பரில் இந்தியா வரவுள்ளது. மேலும், 5 கூடுதல் எஸ்- - 400 அமைப்புகளை வாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire