Paristamil Navigation Paristamil advert login

பிரதமர், முதல்வரை பதவி நீக்கும் மசோதா; திருத்தங்களுடன் பார்லி., குழு பரிந்துரை

பிரதமர், முதல்வரை பதவி நீக்கும் மசோதா; திருத்தங்களுடன் பார்லி., குழு பரிந்துரை

13 ஆடி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 149


பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி, தொடர்ந்து, 30 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்களை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கக் கூடாது; தற்காலிகமாக பதவி நீக்கலாம்' என, பார்லி., கூட்டுக்குழு பரிந்துரைத்துள்ளது.

குற்ற வழக்கில் சிக்கி, பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து, 30 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டால், 31வது நாள் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் வகையில், 2025 ஆகஸ்டில், 130வது அரசியல் சாசன திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டின. மேலும், இந்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லி., கூட்டுக்குழுவில் இருந்தும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வெளியேறின.

இந்நிலையில், இந்த மசோதாவை ஆய்வு செய்யும் பார்லி., கூட்டுக் குழு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதன் விபரம்: குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்யக் கூடாது. சட்ட நடைமுறைகள் முடியும் வரை, தற்காலிகமாக பதவி நீக்கலாம்.

ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றங்களே தீவிர குற்றங்கள் என வரையறுக்கப்பட வேண்டும். இதற்கென தனியாக ஒரு குற்றப்பட்டியலை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணை நடக்காவிட்டாலோ, தற்காலிக பணி நீக்க தானாகவே ரத்தாகி, அவர் மீண்டும் பழைய பதவியை பெற வழிவகை செய்ய வேண்டும்.

பிரதமர், முதல்வர் போன்ற உயர் அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் மீதான வழக்குகளை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விரைவு நீதிமன்றங்கள் அல்லது சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து அதிவேகமாக விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றால், அதற்கேற்ப மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.