ஆப்பரேஷன் துாபான் அதிரடி ஒருங்கிணைப்பு திட்டம் துவக்கம்
12 ஆடி 2026 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 117
கேரளாவில் தொடங்கப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான, 'ஆப்பரேஷன் துாபான்' வெற்றி பெற்றதை அடுத்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, மாநிலங்களுக்கு இடையிலான நிரந்தரமான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க கேரளா, தமிழகம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் முடிவு செய்துள்ளன.
கேரளாவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே சமீபகாலமாக போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வந்தது. அதை தடுக்கும் விதமாக, 'ஆப்பரேஷன் துாபான்; தி நார்கோ ஹன்ட்' என்ற நடவடிக்கையை, அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் தொடங்கியது.
பறிமுதல்
'துாபான்' என்றால் ஹிந்தியில் புயல் என்று அர்த்தம். போதை என்னும் புயலில் சிக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவே இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.
ஆப்பரேஷன் துாபான் நடவடிக்கை வாயிலாக மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனையில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், தென் மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகளின் கூட்டம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் நடந்த கூட்டத்தில், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகளும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கேரளாவில் செயல்படுத்தப்படும் ஆப்பரேஷன் துாபான் திட்டத்தை, தென் மாநிலங்களுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி இடையே நிரந்தரமான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பின், அமைச்சர் ரமேஷ் சென்னி தலா கூறியதாவது:
உளவு தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கவும், மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கையை உறுதி செய்யவும், அனைத்து தென் மாநிலங்களிலும் போலீஸ் எஸ்.பி., அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சுங்கத் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய முகமைகளும், தங்கள் தரப்பில் இருந்து ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதியளித்துள்ளன.
கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கடத்தல் கும்பல்களை களைந்தெறியவும், அவ்வப்போது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படும் முக்கிய வழித்தடங்களை தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை, இந்த மாநிலங்களுக்கு இடையிலான அமைப்பு விரைவில் மேற்கொள்ளும். கடத்தல்காரர்கள் அதிகம் பயன்படுத்தும், 'ஆன்லைன்' தளங்கள், கூரியர் சேவைகள், 'டிராப்' டெலிவரி முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, மாநில எல்லைகள், சாலைகள், பஸ்கள், ரயில்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நுழைவு புள்ளி களையும் மூடுவதில் அடுத்த கட்ட கவனம் செலுத்தப்படும். கேரளாவில் ஆப்பரேஷன் துாபான் தொடங்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மருந்து கடைகள் வாயிலாக பெறப்படும் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, சுகாதாரம் மற்றும் போலீசார் மாநிலம் முழுதும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் 20 மாவட்டங்களில்
பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு படை வலுப்படுத்தப்படும். திருவனந்தபுரம்மற்றும் எர்ணாகுளத்தில் மேலும் இரண்டு சிறப்பு போதைப்பொருள் தடுப்பு சட்ட நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும்.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க, கேரளாவில் கூடுதலாக 10 சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் முன்மொழிவு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire