Paristamil Navigation Paristamil advert login

பள்ளிகளில் அரசியல் கட்சி சார்ந்த செயல்பாடுகள் கூடாது; அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

பள்ளிகளில் அரசியல் கட்சி சார்ந்த செயல்பாடுகள் கூடாது; அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

11 ஆடி 2026 சனி 13:38 | பார்வைகள் : 122


பள்ளிகளில் அரசியல் கட்சி சார்ந்த செயல்பாடுகள் கூடாது' என, பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி, கட்சி சார்ந்த செயல்பாடுகளில், த.வெ.க.,வினர் உட்பட எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாக அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்த நாள் விழா நடந்தது.

விழாவில், மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழா முடிந்த பின், அவர் அளித்த பேட்டி:

முதல்வர் விஜயின் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடியது தொடர்பாக அரசு பதில் அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது; அதற்கு, நாங்கள் பதில் அளிப்போம்; சட்டரீதியாக எதிர்கொள்வோம். த.வெ.க., உட்பட, எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும், கட்சி கொடியுடன், கட்சி அடையாளங்களுடன் பள்ளிகள் உள்ளே செல்வதை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் கட்சி சார்ந்த செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதையும் மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்வு வினாத்தாள் கடினம் என்ற கருத்து வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரம் கேட்டுள்ளோம். இதற்கு முந்தைய தேர்வுகளில், வினாத்தாள் எப்படி தயார் செய்யப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தி.மு.க., ஆட்சியில், 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்படக்கூடாது; குறிப்பிட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லை என்றாலும், மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளோம். குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்வோம்.

சென்னையில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மாணவியை ஆசிரியர்கள் வெளியே நிறுத்தவில்லை. தகவல் தொடர்பு பிரச்னை தான். அதனால், ஆசிரியர் மீது நடவடிக்கை என்பது தேவையற்றது. கல்வி கட்டணம் நிலுவை உட்பட சில காரணங்களுக்காக, மாணவர்களுக்கான டி.சி.,யை தனியார் பள்ளிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் கவி கணேசன் தாக்கல் செய்த மனு: கடந்த 22ம் தேதி, முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில், த.வெ.க.,வினர் தங்கள் கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தினர்; அப்போது, மாணவர்களை பாட்டு பாட, கோஷம் எழுப்ப வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வர் விஜய் முகம் வடிவில், 3,000 மாணவர்களை வெயிலில் அமர வைத்துள்ளனர்

குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் பெற்றோர் உள்ளனர். மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது, கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது. கல்வி நிறுவனங்களில், அரசியல், மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்களை, 'சஸ்பெண்ட்' செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

பள்ளிகளில்தேவையின்றி நுழைய தடை

வரும் காலங்களில், பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதியில்லை. அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளை தவிர்த்து, பிறந்த நாள் விழாக்களோ, அரசு சாரா நிகழ்வுகளோ நடத்தக்கூடாது.எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பினரும் மாணவர்களை சந்திக்க அனுமதி இல்லை.

வகுப்பு நேரத்தில், யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ - மாணவியரை சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அரசு பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

ராஜ்மோகன்,
பள்ளி கல்வித்துறை அமைச்சர், த.வெ.க.,