கோயம்பேடு பழைய பஸ் நிலையத்தை தலைமை செயலகமாக மாற்ற திட்டம்
11 ஆடி 2026 சனி 12:33 | பார்வைகள் : 120
சென்னை கோயம்பேடு பழைய பஸ் நிலைய பகுதிக்கு, தலைமை செயலகத்தை மாற்றுவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்பேடில், 2002ம் ஆண்டு 36 ஏக்கர் பரப்பளவில், புறநகர் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இது, 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இங்கிருந்து, புதுச்சேரி, கர்நாடகா, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பஸ் நிலையத்திற்கு வெளியே, மாநகர பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து, சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு மாற்றாக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு பஸ் நிலையத்தில், வணிக வளாகம், பன்னோக்கு மையம் கட்ட, சி.எம்.டி.ஏ., வாயிலாக திட்டமிடப்பட்டது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வணிக வளாகத்திற்கு மாற்றாக, புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஆரம்ப கட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைமை செயலகத்தில் தற்போது இடநெருக்கடி அதிகரித்து உள்ளது. அதிகாரிகள், அலுவலர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, தலைமை செயலகம் வந்து செல்வதிலும், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, கோயம்பேடில் உள்ள, பழைய பஸ் நிலையத்தில், தலைமைச் செயலகம் கட்டலாம் என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், முதல்வரிடம் கூறியுள்ளனர்.
பஸ் நிலையம் அருகில், அரும்பாக்கம், நெற்குன்றம், விருகம்பாக்கம் சுற்றுப்பகுதிகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வசித்து வருகின்றனர். கோயம்பேடில் தலைமைச் செயலகம் கட்டினால், அதிகாரிகள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.
வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, பஸ் வசதி மற்றும் மெட்ரோ ரயில் வசதி உள்ளது. முதல்வர் அனுமதி அளித்தால், இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதற்கு, 350 கோடி ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire