Paristamil Navigation Paristamil advert login

ஊழலை ஒழிப்பதாக பேசுகின்றனரே அன்றி நடவடிக்கை எடுப்பதில்லை: ஐகோர்ட்

ஊழலை ஒழிப்பதாக பேசுகின்றனரே அன்றி நடவடிக்கை எடுப்பதில்லை: ஐகோர்ட்

11 ஆடி 2026 சனி 08:20 | பார்வைகள் : 118


ஊழலை ஒழிப்பதாக, 'மைக்' முன் அனைவரும் பேசுகின்றனர்; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுதில்லை' என, சென்னை ஐகோர்ட்அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். அப்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு, 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயனுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி, 2025ம் ஆண்டு நவம்பரில் அனுப்பிய கடிதம், இன்னும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களுடன் ஆஜராகும்படி, அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக, நீதிபதி கூறியதாவது:

ஊழலை ஒழிப்பதாக, 'மைக்' முன் அனைவரும் பேசுகின்றனர்; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; தங்களை தொட முடியாது என, அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும். குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. அடுத்த தேர்தலும் நடந்து விட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை. மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.