யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீங்க: மக்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
11 ஆடி 2026 சனி 05:14 | பார்வைகள் : 152
தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் அடுத்தடுத்து மாட்டப் போகின்றனர். வரும் நாட்களில், தமிழக வெற்றி கழக அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்,'' என, கரூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய், ''யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள்; யாராவது லஞ்சம் கேட்டால், இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்,'' என்றார்.
கரூரில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பரில் காவல் துறையினர் எச்சரித்ததால் பெரம்பலுார் செல்லவில்லை. அதுபோல, கரூர் காவல் துறையும் எச்சரிக்கை செய்திருக்கலாம். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், காவல் துறையே கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.
யார் காரணம்?
ஆனால், கூட்டம் நடந்த இடத்திற்கு காவல் துறையே எங்களை அழைத்து சென்றது. இது, நாடகம் என்பது தெரியாமல், கரூர் காவல் துறைக்கு நன்றியும் சொன்னேன். கரூர் துயரத்திற்கு யார் காரணம்? யார் சொல்லி இதையெல்லாம் செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
தொலைக்காட்சியில் என் படமோ, பாட்டோ வந்தால், தொலைக்காட்சி திரையை முத்தமிடும் அக்கா, தங்கைகளின் பிள்ளைகளை, என் படத்தை பார்த்தால், கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்த பச்சை பிள்ளைகளை இழந்திருக்கிறோம்.
அந்த வலியோடு இருக்கும் என்னை ஏளனம் செய்தனர். 'ஓடி ஒளிந்து கொண்டு விட்டான்' என்றனர். வந்த கூட்டத்திற்கேற்ப காவல் துறை பாதுகாப்பு கொடுக்காமல், சட்டசபையில் அன்றைய முதல்வர் ஸ்டாலின், என் மீது பழி சுமத்தினார்.
எனக்காக மக்களை காக்க வைக்க, நான் ஒன்றும் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. எனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக, எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்து விட்டனர்.
ஆனால், இது போதாது. கால காலத்திற்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு, நிரந்தரமான ஒரு பதிலடியை, மக்கள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நான் மக்களை விட்டு ஓடி விடுவேன் என்று நினைத்தனர். யார் என்ன சொன்னாலும், நான் மக்களை விட்டு ஓட மாட்டேன். பணமா, ஜனமா என்று கேட்டால், எனக்கு ஜனம் தான் முக்கியம்.
தீயசக்தி தி.மு.க.,வும், தீர்ந்து போன சக்தி அ.தி.மு.க.,வும், கட்சி நிதி என்ற பெயரில் மாறி மாறி கொள்ளை அடித்தன. சட்டசபையில் பேசும் போது, கட்சி நிதி என்று சொன்னதும் எதிர்க்கட்சியினர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
சென்னையில் ஒரு பாலம் கட்ட வழக்கமாக ஆகும் செலவை விட, பல மடங்கு அதிக தொகையுடன் 'டெண்டர்' விட்டுள்ளனர்; அதையெல்லாம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம்.
தோண்ட தோண்ட இன்னும் எத்தனை லட்சம் கோடி ரூபாய் ஊழல் வருமோ தெரியவில்லை. இதனால், முந்தைய ஆட்சியாளர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர் .
இரண்டு மாத ஆட்சியில், அரசு அலுவலகங்களில், ஒரு காசு கூட ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளோம். அரசு அலுவலகங்களில் உடனுக்குடன் வேலை நடக்கிறது; மரியாதையும் கிடைக்கிறது.
எல் அண்டு டி' நிறுவனத்தின், 8,600 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று திட்டங்கள், 134 கோடி ரூபாயில் குறுவை சிறப்பு தொகுப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படை, தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அறிவித்துள்ளோம். தீயசக்தி மாதிரி, 'ரீல் தாய்மாமன்' அல்ல, 'ரியல் தாய்மாமன்' நான்.
தி.மு.க., ஆட்சியில் ஒரு ஓட்டை பாத்திரத்திற்குள் தண்ணீர் ஊற்றி வந்துள்ளனர். அதனால், பாத்திரம் காலியாக இருக்கிறது. தண்ணீர் எங்கே போனது என்பது தெரியவில்லை. இப்போது, நான் சொன்னதெல்லாம், சும்மா ஒரு 'சாம்பிள்' தான்; வரும் நாட்களில் த.வெ.க., அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.
என் மனதை விட்டு, கரூர் எப்பவும் நீங்கவே நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை, இனி வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற அரசியல் சதியை, அரசியல் சூழ்ச்சியை, யாரும் யோசிக்கவே கூடாது. அதற்காக த.வெ.க., சார்பில், கரூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழித்திருக்கிறோம். எனவே, கழுதை, குதிரை, ஒட்டகப் பேரம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. கரூர் கம்பெனி முதலாளி ஒருவர் ஓடு ஓடு என ஓடிக் கொண்டிருக்கிறார்; இன்னொருவர் சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டுள்ளார். இன்னும் தோண்ட தோண்ட எவ்வளவு பேர் மாட்டப்போகின்றனர் என்பது தெரியவில்லை.
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், 'கொடுக்க முடியாது' என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தினால், 'இது எங்கள் மகன், எங்கள் பிள்ளை, எங்கள் அண்ணன், எங்கள் தம்பி, எங்கள் விஜய் ஆட்சி' என்று சொல்லுங்கள்.
மக்கள் என்னை முதல்வராக தேர்வு செய்துள்ளனர். ஆனால், இப்போதும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, கரூருக்கு விஜய் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்பதை உணருங்கள்.
உச்ச நீதிமன்றம் சம்மட்டியால் ஓங்கி மண்டையில் அடித்தும், தி.மு.க., விழித்துக் கொள்ளவில்லை என்றால் கஷ்டம் தான். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். பதவி வெறி பிடித்து அலையாதீர்கள்; நியாயமாக அரசியல் செய்யுங்கள்.
தீய சக்தியை திருத்தவும் முடியாது; அவர்களாக திருந்தப் போவதும் இல்லை. எனவே, வரும் இடைத்தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கொளத்துாரில் கொத்து பரோட்டா!
முதல்வர் பேசியதாவது:
சட்டசபையில் முதல்வர் பேசுவதில்லை என்கின்றனர். பேசினால் வெளியே ஓடி விடுகிறீர்கள். இனி நான் பேசும் போது, 'எல்லா கதவுகளையும் பூட்டுங்கள்' என்று சபாநாயகரிடம் சொல்லி விட்டு தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் பேசியதற்கே, சென்னை கொளத்துாரில் கொத்து பரோட்டா போட்டு விட்டனர். இதற்கு மேல் பேசினால், மொத்தமாக முடிந்து விடும். நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, ஒரு கூட்டம் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறது. பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும்.
மேகதாது அணை தொடர்பான வழக்கில், தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, தி.மு.க., ஆட்சி நடந்தது. ஆனால், த.வெ.க., அரசை குறை சொல்கின்றனர். 'அந்த மாநில முதல்வர் பேசுகிறார்; நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று கேட்கின்றனர். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேலை செய்வது தான் முக்கியம்.
நான் யார் தெரியுமா, தொட்டுப்பார்' என்று சவால் விட்டு பலனில்லை. பேசி பேசி பிரச்னையை வளர்த்துக் கொண்டு, யார் மீதாவது பழி போடும் அரசியல் எனக்கு தேவையில்லை; அதை செய்யப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
* முதல்வரின் நிகழ்ச்சி நடந்த கலையரங்கத்துக்கு அருகில் உள்ள, பரணி பார்க் பள்ளி, கொங்கு மேல்நிலைப்பள்ளி, ஜெயராம் மேல்நிலைப்பள்ளி, கொங்கு கலை அறிவியல் கலைக்கல்லுாரி ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
* கூட்டத்தில் பங்கேற்றோருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், ஸ்நாக்ஸ் 'பை' வழங்கப்பட்டது. அதில், தண்ணீர் பாட்டில், 30 கிராம் மிக்சர், ஒரு பாதுஷா மற்றும் 5 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட் இருந்தது.
* முதல்வர் விஜய் கூட்டத்துக்கு, கியூ.ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டை, உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு
சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை எப்படி செயல்படுத்த வேண்டுமோ, அதை சரியாக செய்வோம். மத்திய அரசு, லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்ய இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதை தமிழக அரசு ஏற்காது. நமக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது; பறிக்கவும் விட மாட்டோம்,'' என்றார் விஜய்.
கூட்டு களவாணிகள்
தீயசக்தி தி.மு.க.,வும், தீர்ந்து போன சக்தி அ.தி.மு.க.,வும் கூட்டு களவாணிகள். தங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அவர்களால் அறிவிக்க முடியுமா; வரும் இடைத்தேர்தலில் அதை நிரூபித்துக் காட்டுங்கள்,'' என்றார் விஜய்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire