Paristamil Navigation Paristamil advert login

மொரோக்கோவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய பிரெஞ்சு அணி!!

மொரோக்கோவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய  பிரெஞ்சு அணி!!

10 ஆடி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 337


2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மொரோக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரெஞ்சு அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அமெரிக்காவின் Boston நகரில் 9 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், மொரோக்கோ அணியின் உறுதியான தற்காப்பை நீண்ட நேரம் உடைக்க முடியாமல் பிரெஞ்சு அணி போராடியது. எனினும் இரண்டாம் பாதியில் Kylian Mbappé மற்றும் Ousmane Dembélé அடித்த கோல்கள் பிரான்சை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றன.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறத் தவறிய நிலையில், மொரோக்கோ கோல் காப்பாளர் Yassine Bounou அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எம்பாப்பே மற்றும் தேசிரே டுவே(Désiré Doué) ஆகியோரின் முயற்சிகளை முறியடித்தார். மேலும் எம்பாப்பே எடுத்த பெனால்டி வாய்ப்பையும் அவர் தடுத்து நிறுத்தியதால், முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதியின் 60ஆவது நிமிடத்தில் எம்பாப்பே தனது திறமையான ஆட்டத்தின் மூலம் பிரான்சுக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 65ஆவது நிமிடத்தில் எம்பாப்பேயின் உதவிப் பாஸை கோலாக மாற்றிய உஸ்மான் டெம்பிலே பிரான்சின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்துள்ள பிரெஞ்சு அணி, ஜூலை 14ஆம் திகதி டல்லாஸ் (Dallas) நகரில் நடைபெறவுள்ள அரையிறுதியில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியை இரவு 9 மணிக்கு (பிரான்ஸ் நேரப்படி) எதிர்கொள்ளவுள்ளது.