மேக் இன் இந்தியா உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது: பிரதமர் மோடி
10 ஆடி 2026 வெள்ளி 11:55 | பார்வைகள் : 137
கடந்த 12 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா ஒரு உலகளாவிய பிராண்டாக வளர்ந்துள்ளது. நமது அலைபேசிகளும், மின்னணு சாதனங்களும் உலகம் முழுவதிலும் உள்ள சந்தைகளை சென்றடைந்துள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, மெல்போர்ன் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது:
இந்த நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களை அங்கீகரிப்பதன் வாயிலாக இந்த உரையை துவங்க விரும்புகிறேன். அவர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத் தலைவர்களுக்கு எனது மரியாதை செலுத்துகிறேன். இந்த அரங்கம் முழுமையாக நிரம்பி உள்ளது. இது ஒரு மாபெரும் வெற்றி நிகழ்ச்சி. இதற்கு முன் சிட்னியில் நான் உங்கள் அனைவரையும் இரு முறை சந்தித்திருக்கிறேன். மெல்போர்ன் நகர மக்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன்.
இந்நாளை மெல்போர்ன் வெற்றி பெற்றுள்ளது. எனது நண்பர், இந்தியாவின் நண்பரான ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை சிட்னியில் நடந்த கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இன்று மெல்போர்னில் நடக்கும் சந்திப்பிலும் பங்கேற்றார். ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மைதானம், மெல்போர்னின் ஐகானிக் மைதானம் என இரு இடங்களிலும் ஒன்றாக இருக்கிறோம். எங்கு பேசினானாலும் அந்தோணி அல்பானீஸ் இந்தியர்களின் மனதை வெல்வதை பார்க்கிறோம்.
2014 ம் ஆண்டில் பிரதமராக முதல் முறை இந்தியாவிற்கு வந்தேன். கடந்த 12 ஆண்டுகளில் இங்கு வருவது மூன்றாவது முறையாகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உறவு மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இதில் முக்கிய பங்கு யார் வகித்தது தெரியுமா மோடி கிடையாது. நீங்கள் அனைவரும் தான். மெல்போர்ன் நகரில் ஒரே நாளில் நான்கு பருவங்களையும் காண முடியும். ஆனால், இந்தியச் சமூகம் தனது தனித்துவமான கலாசாரத்தால் இந்நகரை இன்னும் துடிப்பானதாக மாற்றி உள்ளது.
மெல்போர்னிலும், அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் இந்தியத்தன்மை நிறைந்த பல இடங்களும் சந்தைகளும் உள்ளன. சிலர், இவற்றை லிட்டில் இந்தியா என்றும், வேறு சிலர் மினி இந்தியா எனவும் சொல்கின்றனர்.பெயர் எதுவாக இருந்தாலும், அவை இந்திய கலாசாரத்தின் சாரம்சத்தை கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை அளிக்கின்றீர்கள். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். பாலில் கரைந்து அதன் இனிப்பை மேலும் கூட்டும் சர்க்கரையைப் போன்றவர்கள் இந்தியர்கள். அன்பின் சாரத்தால் உலகை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் பயன்படுத்தப்படும் பால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால், அதைக்கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் இந்தியத்தன்மை கொண்டது. பருப்பு மற்றும் காய்றிகள் ஆஸ்திரேலியாவில் விளைந்தவையாக இருந்தாலும் அவை உண்மையான இந்திய மசாலாப் பொருட்களை கொண்டு சமைக்கப்படுகின்றன.
இந்தியாவில் பஜன் கிளப்பிங் எனும் புதிய போக்கு குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை ஜென் இசட் எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இங்கும் வார இறுதி நாட்களில் ஆன்மிக உணர்வுகளால் நிறைந்திருப்பதாக நான் அறிகிறேன். ஒருவரது வீட்டில் நடக்கும் சத்யநாராயண பூஜை, குருத்வாராவில் நடக்கும் பிரார்த்தனை, குழந்தைகளின் பங்க்ரா அல்லது பரதநாட்டிய நிகழ்ச்சிகள், அல்லது கிரிக்கெட் போட்டி என ஏதோ ஒரு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்தியத் திரைப்பட விழாவும் வந்துள்ளது. அது இன்னும் சில நாட்களில் மெல்போர்னில் துவங்க உள்ளது. இவ்விழா வெற்றிகரமாக நடைபெற எனது வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.
21ம் நூற்றாண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி பயணிக்கிறது. ஒரு கனவு நனவாகும் போது புதிய கனவு பிறக்கிறது. ஒரு விளக்கு ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றுகிறது என சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு கனவு, மற்றொரு கனவுக்கு உயிர் கொடுக்கிறது என நான் சொல்கிறேன். ஆயிரக்கணக்கான கனவுகள் உருவாகின்றன. ஒரு இலக்கு எட்டப்படும்போது, அதை விட பெரியதொரு உறுதிப்பாடு அந்த இடத்தைப் பிடிக்கிறது. மேலும் வளருங்கள். மேலும் சாதனை செய்யுங்கள் என்பதை நம்பும் இந்தியா இது. 140 கோடி மக்கள் கொண்ட விருப்பங்கள் நிறைந்த ஒரு தேசம்.
இன்னும் வளருங்கள். நிறைய சாதனை செய்யுங்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் விரைவில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்தியா தயாராக உள்ளது. சொந்த விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகளில் இந்தியா உள்ளது. இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக இந்தியா உள்ளது. மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது. தினமும் 1.25 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். 3வது மிகப்பெரிய மெட்ரோ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது. நமோ பாரத் ரயில் மற்றும் வந்தே பாரத் அதிவேக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் பணியில் இந்தியா பணியாற்றி வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பின் திறன் மற்றும் நம்பகத்தன்மையையும் உலகம் கண்டு வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இதனை உலகம் பார்த்தது. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அவற்றின் எதிரொலி உலகம் முழுவதும் கேட்டது. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீதான இந்தத் தாக்குதல் உங்களுக்கு கேட்டதா இல்லையா
கடந்த 12 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா ஒரு உலகளாவிய பிராண்டாக வளர்ந்துள்ளது. நமது அலைபேசிகளும், மின்னணு சாதனங்களும் உலகம் முழுவதிலும் உள்ள சந்தைகளை சென்றடைந்துள்ளன. நமது வாகனங்களும் மருந்து பொருட்களும் உலகளவில் தங்கள் தடத்தை பதித்து விரிவடைந்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அட்டஷேசன் எனப்படும் அதிகாரிகளிடம் கையெழுத்து பெறும் முறை வழக்கமாக இருந்தது. அதிகாரிகளிடம் கையெழுத்து பெற வேண்டியிருந்தது. அடையாளத்தை நிரூபிக்க அதிகாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எங்களை பொறுத்தவரை குடிமக்களே முதன்மையானவர்கள். கையெழுத்துக்காக காத்திருக்கும் நிலை மாறிவிட்டது. இதனால் சுய சான்றொப்பம் உருவாக்கப்பட்டது.
இந்தியா உதவிக்கரம் நீட்டும் போது பாஸ்போர்ட்டை பார்ப்பதில்லை. இந்தியா உதவிப்பொருட்களை அனுப்பும் போது, பாஸ்போர்ட்டின் நிறத்தை பார்ப்பதில்லை. இதனால், இந்தியா மீது உலகம் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது.
இந்தியா பலம் பெறும்போது மனித குலம் பயன்பெறும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு இந்தியா உதவி செய்தது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை இந்தியா துவக்கி உள்ளது. அத்துடன் மீட்பு மற்றும் நிபுணர்களையும் அனுப்பி வைத்துள்ளது. மருத்துவ குழுவினர் உடனடியாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இந்தியா உதவி செய்தது. இதுபோன்று பல உதாரணங்களை கூற முடியும். மியான்மரில் ஆப்பரேஷன் பிரம்மா, புயலால் பாதித்த இலங்கைகக்கு உதவ ஆப்பரேஷன் சாகர் பந்து ஆகியவற்றை துவக்கினோம்.
2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த உள்ளது. 3036 ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கான போட்டியில் உள்ளது.
இரு நாடுகளின் நலனுக்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாடுபடும். இதற்கு சிறந்த உதாரணம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம். கடந்த 12 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் உலகில், இந்தியா உலகின் 3வது பெரிய சந்தையாக மாறி உள்ளது. இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல்முறையாக சொந்த ராக்கெட்டை ஏவ உள்ளது. கல்வி , திறன் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றனர். ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது மையங்களை திறந்து வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire