Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் - 90 இலக்குகள் குறிவைப்பு

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் - 90 இலக்குகள் குறிவைப்பு

9 ஆடி 2026 வியாழன் 15:09 | பார்வைகள் : 138


ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹார் மீது அமெரிக்கா இன்று சரமாரியான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான United States Central Command, இந்த நடவடிக்கையின் போது ஈரானின் சுமார் 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் இராணுவ வசதிகளே தாக்குதலின் பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உடன்பாட்டை மீறி ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. இதனையடுத்து, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், சபஹார் நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அவசர உதவி குழுக்கள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்தத்துக்குப் பின்னர், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகம் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும் என கூறப்படுகிறது.

ஓமன் வளைகுடாவில் ஹோர்முஸ் நீரிணையின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் முக்கிய துறைமுகங்களில் சபஹார் துறைமுகம் ஒன்றாகும்.

ஈரானின் சபஹார் துறைமுகமானது பந்தர் அபாஸ் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்க இராணுவ தகவல்களின்படி, சபஹார் பகுதியில் உள்ள கப்பல் நிறுத்துமிடங்கள், கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கோபுரங்கள் மற்றும் அருகிலுள்ள இராணுவ சொத்துகள் தாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பயன்படுத்தும் துறைமுக பகுதிகள் மற்றும் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் தாக்குதலில் இருந்து தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று சரக்கு கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், அமெரிக்கா – ஈரான் இடையிலான சமாதான முயற்சிகள் பாதிக்கப்பட்டு, மீண்டும் இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரான் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், அந்த நாட்டின் இலக்கு பட்டியலில் தனது பெயர் முக்கியமாக உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப், “இதுவரை நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கலாம். ஆனால் அது எப்போதும் தொடராது” என அச்சம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன.